ராகுல் ஏன் இஃப்தார் விருந்து அளிக்கவில்லை?

ராகுல் ஏன் இஃப்தார் விருந்து அளிக்கவில்லை?

ரம்ஜான் மாதத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் நாடெங்கும் இஃப்தார் விருந்து அளிப்பது என்பது வாடிக்கைதான். பா.ஜ.க. கூட இதற்கு விதி விலக்கு இல்லை.

தலைநகர் டெல்லியிலும் சரி, மாநில அளவிலும் சரி காங்கிரஸ் கட்சிக்கு தனது கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து இஃப்தார் விருந்த அளிப்பது என்பது ஒரு வருடாந்திர சடங்கு.

சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்த நாட்களிலும் சரி, இல்லாத நாட்களிலும் சரி, டெல்லியில் ஆண்டுதோறும் இஃப்தார் விருந்து அளிப்பது வழக்கம்.

இந்த வருடம், சோனியா காந்தி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்ட சூழ்நிலையில், காங்கிரஸ் மேல் மட்டத் தலைவர்கள் சிலர், “ராகுல் காந்தி, இந்த வருடம் இஃப்தார் விருந்து அளிக்க வேண்டும்” என்று ஆலோசனை சொன்னார்கள். ஆனால், கட்சிக்குள்ளேயே இன்னொரு தரப்பு, “ராகுல் இஃப்தார் விருந்து அளிக்கவேண்டாம்; ஏற்கனவே, ஓட்டுக்காக மைனாரிடி சமூகத்தினரை திருப்திப் படுத்தும்படியாக நடந்து கொள்வதாக காங்கிரஸ் மீது ஒரு குற்றச்சாட்டு இருப்பதால் ராகுல் இஃப்தார் விருந்து அளிக்கக் கூடாது” என ஆலோசனை சொன்னது.

என்ன செய்வது எனக் குழம்பிப்போன ராகுல், ஒரு புது ஐடியாவை செயல்படுத்தினார். இஃப்தார் விருந்து வேண்டாம் என்று சொல்லிவிட்டு, டெல்லியின் முஸ்லிம்கள் அதிகம் வாழும் சாந்தினி சவுக் பகுதிக்கு ஒரு விசிட் அடித்தார். லோக்கல் முஸ்லிம்களை சந்தித்துப் பேசினார். அவர்களோடு சாப்பிட்டார்.

அடுத்து, டெல்லியின் பெங்காலி மார்கெட் பகுதிக்குச் சென்றார். திருவாளர். பொதுஜனங்களை சந்தித்து அளவளாவினார். பெங்காலி இனிப்புகளை சுவைத்தார்.

இதைப் பற்றி, டெல்லி மீடியா வட்டாரத்தில் ஒரு சீனியர் நிருபர், “ராகுல் காந்தி சரிவிகித உணவை சாப்பிடக் கற்றுக் கொண்டுவிட்டார்!” என்று கமெண்ட் அடித்தார்.

“ம்! இந்த சரிவிகித உணவு ராகுலின் உடல்நலத்துக்கு ஓ.கே! கட்சியை புஷ்டியாக்குமா?” என்று பதில் கமெண்ட் அடித்தார் இன்னொரு சீனியர்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com