

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் நீர்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்த 22 டெண்டர்களை ஒரே நேரத்தில் ரத்து செய்தது தமிழ்நாடு அரசு. ஒப்பந்த சான்றிதழை பெறுவதற்கு ஒப்பந்ததாரர்களை அதிகாரிகள் நேரில் அழைத்ததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓபன் டெண்டராக இல்லாமல் லிமிடட் டெண்டராக விடப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் நீர்வளத்துறையின் பொள்ளாச்சி பகுதியில் வெளியிடப்பட்ட 22 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன.
நீர்வளத்துறையின் பொள்ளாச்சி பிரிவில் ஓபன் டெண்டராக இன்றி லிமிடெட் டெண்டர் ஆக விடப்பட்டுள்ளது. சான்றிதழ் பெற ஒப்பந்ததாரர் நேரில் வரக் கூடாது என்ற நிலையில் நேரில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. சான்றிதழை பெறுவதற்கு ஒப்பந்ததாரர் நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலையில் இது தொடர்பாக அறப்போர் இயக்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. விரைவில் புதிய நிபந்தனைகளுடன் 22 டெண்டர்களும் வெளியிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு அமைந்த பிறகு குறிப்பாக டெண்டர்களில் நிதி நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்ற நிலையில் தொடர்ந்து டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதன்படி தற்போது பொள்ளாச்சி நீர்வளத்துறையில் 22 டெண்டர்களை ரத்து செய்து நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. டெண்டர் நடைமுறைகளில் கடுமையான விதிமீறல்கள் மற்றும் சில குறிப்பிட்ட நபர்களுக்கு சாதகமாக முறைகேடுகள் நடப்பதாக திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி பகுதி அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றம் சாட்டியது. விதிகளை முறையாக பின்பற்றாமல் விடப்படுகின்ற எந்த டெண்டர்களும் உடனுக்குடன் ரத்து செய்யப்படும் என்ற கடுமையான கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தான் இந்த 22 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் பகுதி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி ஆழியாறு வடிநிலக் கோட்டத்தின் சார்பில் விடப்பட்ட டெண்டர்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்ட பொழுது, அதில் வெளிப்படைத்தன்மை இல்லாததும், உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததும் கண்டறியப்பட்டு அதிரடியாக ரத்து செய்யப்பட்டன. அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு எந்தவித சிபாரிசுகளுக்கும் இடமில்லை என்றும், முறைகேடுகளுக்கு சமரசம் செய்து கொள்ள இடம் அளிக்கப் போவதில்லை என்றும் இந்த டெண்டர்கள் ரத்து செய்ததன் மூலம் தமிழக அரசு திட்டவட்டமாக உணர்த்தி உள்ளது.
சரிந்த மண்ணை அள்ளுதல், காடு மற்றும் செடி கொடிகளை அகற்றுதல் போன்ற பணிகளுக்கான இந்த ஆன்லைன் டெண்டர்களில் தளப் பார்வையிடல் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இது பரவலான எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஒப்பந்ததாரர்களின் புகார்களைத் தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த 22 டெண்டர்களையும் நிர்வாகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
எந்த சூழ்நிலையிலும் சட்டத்திற்கு உட்பட்டே டெண்டர்கள் ஒதுக்கப்படும் என்ற அரசின் நிலைப்பாடு நேர்மையானவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், குறுக்கு வழியில் செல்லும் அதிகாரிகள் இடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்விதமான தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் பொழுது முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதுடன், அரசு நிதியை துஷ்பிரயோகம் செய்வதும் தடுக்கப்படும். நீர்வள ஆதாரத் துறையின் கீழ் உள்ள பலவிதமான பராமரிப்புப் பணிகள், கால்வாய் தூர்வாருதல் மற்றும் பழுது பார்ப்புப் பணிகள் தொடர்பான டெண்டர்கள் ரத்து செய்யப்படுவதன் மூலம் முறைகேடுகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.