குட் நியூஸ்..! இனி அசல் பத்திரம் இல்லாவிட்டாலும் பத்திரப்பதிவு செய்யலாம்..!

சொத்து பதிவின்போது அசல் ஆவணங்களை சமர்ப்பிப்பது கட்டாயம் என்ற சட்டப்பிரிவை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பத்திரப்பதிவு
TN Property Registrationimage credit-imarat.com.pk
Updated on

சொத்து பதிவின்போது முந்தைய அசல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக பதிவுச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 34-சி (Section 34-C) சட்டத் திருத்தத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. போலி ஆவணப் பதிவுகளைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்தத் திருத்தம், சொத்துரிமையில் தேவையற்ற சிக்கல்களை உருவாக்குகிறது என்று கூறி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இதை முழுமையாக நீக்கியுள்ளது.

தமிழகத்தில் பத்திரப்பதிவின்போது சம்பந்தப்பட்ட சொத்துகளின் அசல் ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த சட்டத்திருத்தமானது கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வந்து உள்ளது.

அதாவது போலி ஆவணப் பதிவுகளைத் தடுக்கவும், பொதுமக்களின் சொத்து உரிமைகளைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு 'Registration (Tamil Nadu Amendment) Act, 2025' என்ற சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டத் திருத்தத்தின் மூலம் பதிவு விதிகளில் '34C' என்ற புதிய பிரிவு உட்புகுத்தப்பட்டது.

இச்சட்டத்திற்கு கடந்த 23.01.2026 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் மக்களின் சொத்துரிமையில் (Constitutional Right) தேவையற்ற வரம்புகளை விதிப்பதாகவும், சார்பதிவாளர்களுக்கு நீதிமன்ற அதிகாரங்களை வழங்குவதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அதன்படி பதிவாளர் அலுவலகங்களில் சொத்துக்களை பதிவு செய்பவர்கள் அசல் ஆவணங்களை (Original parent documents) கையில் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறையானது அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பானது. இதனால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சட்டத்திருத்தத்தை செல்லாது என்று அறிவித்து உத்தரவிட வேண்டும் என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் அசோசியேசன் கூட்டமைப்பு உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல்கள் ஆஜராகி, தமிழக சட்டமன்றம் சொத்து உரிமைகளை பாதுகாப்பதற்கும் மோசடிகளை தடுப்பதற்கும் தனக்கு உள்ள அரசியமைப்பு கடமையை நிறைவேற்றும் வகையில் பதிவுச்சட்டத்தில் 34(சி) பிரிவை சேர்த்து திருத்தம் செய்தது. அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பெறப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் போலி விற்பனை பத்திரங்கள் பதிவு, ஒரே சொத்தை பலமுறை விற்பனை செய்தல், போலியாக தயாரிக்கப்பட்ட மூல ஆவணங்களை பயன்படுத்துதல் போன்றவை தடுக்கப்பட்டு உள்ளன என்றனர்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு..

தமிழ்நாடு பதிவுச் சட்டத்திருத்தத்தின் பிரிவு 34(சி) யானது ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டினால் ரத்து செய்யப்பட்ட முந்தைய விதி 55-ஏ-ஐ மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியே தவிர வேறில்லை என்பதே எங்கள் கருத்தாகும்.

மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்

அதுமட்டுமல்லாமல் சட்டமன்றம் நீதிசார் அதிகாரங்களை நிர்வாகத்துறையிடம் ஒப்படைக்க முடியாது. இத்தகைய செயல்பாடு அதிகார பகிர்வு கோட்பாட்டை மீறுவதோடு அரசியமைப்பு சட்டத்தின் 14-வது பிரிவையும் மீறுகிறது. மேலும் அரசியமைப்பு சட்டத்தின் 300-ஏ பிரிவின் கீழ் தனிநபர்களின் சொத்துரிமைக்கு தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற கட்டுப்பாடுகளை இந்த சட்டத்திருத்தம் விதிக்கிறது.

இது சொத்து மாற்ற சட்டம் மற்றும் ஒப்பந்த சட்டம் போன்ற முக்கிய சட்டங்களில் விதிகளையும் மீறுவதுடன், அதிகார பகிர்வு கோட்பாட்டை மீறுவதாகவும், தன்னிச்சையானதாகவும் உள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டு பதிவுச்சட்டத்தின் 34-சி பிரிவை சேர்த்து பிறப்பித்த சட்டத்திருத்ததை ரத்து செய்கிறோம். மேலும் இந்த சட்டத்திருத்தம் அதிகார வரம்பை மீறியது என்றும் அறிவிக்கிறோம்.

மோசடி பதிவைக் குறைக்க, பதிவின்போது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அசல் ஆவணம் கட்டாயமாக்க்கப்படுகிறது. முந்தைய அசல் ஆவணம் தொலைந்து விட்டால், விற்பனையாளர் காவல்துறையில் இருந்து ஆவணம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை சான்றிதழையும் இது தொடர்பான தினசரி நாளிதழில் வெளியிடப்பட்ட விளம்பரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். அதுவே, பூர்வீக சொத்தாக இருந்தால், சொத்தின் உரிமையாளர் தனது உரிமையை நிரூபிக்க பட்டா, வரி இரசீது போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், 10 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வில்லங்க சான்றிதழும் பதிவு செய்வதற்கு பதிவின் போது சரிபார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இனி சார்பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை : வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு..!
பத்திரப்பதிவு

மேலும் வில்லங்கச்சான்றிதழ் கோரும்போது சொத்தின் தற்போதைய அல்லது முந்தைய வில்லங்கங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட வேண்டும்.

வில்லங்கச் சான்றிதழ் விண்ணப்பித்தோருக்கு சர்வே எண், கதவு எண் ஆகிய விபரங்களுடன் அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் எனவும் பதிவுத்துறை தலைவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது. இப்பணி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் உடனடியாக தொடங்கப்பட்டு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் படிப்படியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

நீதிபதிகளின் இந்த உத்தரவின்படி, அசல் ஆவணங்கள் இல்லாவிட்டாலும் இனிமேல் சொத்துக்களைத் தடையின்றிப் பதிவு செய்ய முடியும்.

இதையும் படியுங்கள்:
இனி ‘வாட்ஸ் ஆப்பில் ‘பிறப்பு சான்றிதழ்’ பெறலாம்?...எப்படி தெரியுமா..?
பத்திரப்பதிவு

இந்த நடவடிக்கையால் அனைத்து பதிவுகளும் வில்லங்க பதிவேடுகளில் சரியாக பிரதிபலிக்கப்படும். இதனால் போலி பதிவு தொடர்பான மாநில அரசின் அச்சம் தீர்க்கப்படுவதுடன், பொதுமக்கள் பதிவுக்கு முன்பு முழுமையான ஆய்வை மேற்கொள்ளவும் வழிவகுக்கும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

logo
Kalki Online
kalkionline.com