

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வருவதால் தினமும் அரசியல் வட்டாரத்தில் புதிய செய்திகளினால் பரபரப்பு நிலவுகிறது. பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் , கன்னியாகுமரி தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் பொன். ராதாகிருஷ்ணன். இவர் தற்போது, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளார் , என்ற செய்தி சமூக ஊடகங்கள் மற்றும் முக்கிய ஊடகங்களில் பரவி வருகிறது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் , விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்ததிலிருந்து , கட்சிகளில் புறக்கணிக்கப்பட்ட பலரும் விஜயை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக அதிமுகவின் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தொடர்ச்சியாக இடம் பெயர ஆரம்பித்துள்ளனர்.
மேலும் இந்த கட்சியுடன் கூட்டணி வைக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய, அமுமுக மற்றும் அதிமுகவின் ஓபிஎஸ் அணியினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பொங்கலுக்குள் டிடிவி.தினகரனும் , முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தவெக கூட்டணியில் இணைவார்கள் என்று கூறியது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.
இந்நிலையில் பாஜகவின் தமிழ்நாட்டு முகமாக கருதப்படும் பொன். ராதாகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகி தவெகவிற்கு செல்ல உள்ளார், என்ற செய்தி அதிக பரபரப்பை கிளப்பி உள்ளது. காரணம் மற்ற அரசியல் தலைவர்கள் அங்குமிங்கும் கூட்டணி வைக்க அலைமோதிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் , மத்தியில் ஆளுங்கட்சியான பாஜகவில் இருந்து ஒருவர் வெளியேறுகிறார் , என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.
தமிழக பாஜகவின் ஆரம்ப காலக் கட்டத் தூண்களில் ஒருவராக விளங்கியவர் பொன். ராதாகிருஷ்ணன் , அவருடைய சகாவான சி.பி.ராதாகிருஷ்ணன் நாட்டின் துணை குடியரசு தலைவர் என்ற பெருமையை பெற்று விட்டார் , அவருக்கு பின் வந்த தமிழிசைக்கு இரு மாநில ஆளுநர் பதவி கொடுத்து இருந்தார்கள் , தனக்கு ஒருமுறைக்கு மேல் எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை என்ற வேதனையில் இருக்கிறார். தேர்தலில் தோல்வியுற்ற மற்றவர்களுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் , இணை அமைச்சர் போன்ற பதவிகள் கிடைக்கும் போது , நீண்ட காலம் கட்சிப் பணியாற்றிய தனக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை, என்பதால் பொன்னார் வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன் சேர்ந்த அண்ணாமலை , அதிமுகவில் இருந்து வந்த நயினார் நாகேந்திரன் போன்றவர்களுக்கு கட்சியில் அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் , தான் ஓரம்கட்டப் படுவதாகவும் உணர்ந்துள்ளார். சமீபத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்ட கூட்டத்திற்கு கூட பொன். ராதாகிருஷ்ணன் அழைக்கப்படாதது அவரது வருத்தத்தை மேலும் அதிகப் படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் உத்தேச பட்டியலில் கூட அவரது பெயர் இல்லை என்று சொல்லப்படுகிறது. கன்னியாகுமரி அல்லது நாகர்கோயிலில் விஜயதாரணிக்கு சீட் வழங்க மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் விஜயின் தவெக கட்சியில் இணைய உள்ளதாக, இன்று காலையில் இருந்து சமூக ஊடகங்கள் மற்றும் சில மீடியாக்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது பற்றி பொன்.ராதாகிருஷ்ணன் சார்பில் அதிகாரப் பூர்வமாக எந்த தகவல்களும் வரவில்லை.