

இந்த வருட பொங்கல் தமிழ்நாட்டு மக்களுக்கு மறக்க முடியாத பொங்கலாக இருக்கும். ஏன் தெரியுமா? 2026-ம் ஆண்டின் தமிழக அரசின் பொங்கல் பரிசாக 3000 ரூபாய் பரிசுத் தொகை அளிக்கும் திட்டம் தந்த மகிழ்ச்சி தான்.
விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழக அரசு தரப்பில் தரப்படும் இது போன்ற சர்ப்ரைஸ்கள் மக்களிடையே கட்சி பாகுபாடின்றி வரவேற்பை பெற்றுள்ளது. பொங்கல் பரிசுத்தொகை குறித்த பல்வேறு பரிசீலனைகளுக்குப் பின் தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 3000 பரிசுப்பணம் வழங்கும் முடிவை அறிவித்தது. ரொக்கத்தொகையுடன் விலையில்லா வேட்டி சேலை மற்றும் பொங்கல் தொகுப்பும் வழங்கப்படும் என அறிவித்தது அரசு.
இதனால் சுமார் 2.22 கோடி குடும்பங்கள் நியாயவிலை கடைகள் மூலமாக பரிசுத்தொகையுடன் கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொது விநியோக திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கு குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதை அறிவோம்.
தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு வழங்கப்படுவதற்கான டோக்கன்கள் நேற்று முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இன்று (08-01-2026) முதல்வரால் இத்திட்டம் துவங்க இருக்கும் நிலையில் தற்போது பணி நிமித்தம் அல்லது வேறு காரணங்களுக்காக வெளியூரில் வசிக்கும் மக்கள் ஒரு மாநிலத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யும் "ஒரே நாடு ஓரே ரேஷன்" (One Nation One Ration Card – ONORC) திட்டம் மூலம் தாங்கள் வசிக்கும் ஊரிலேயே ரேகை வைத்து பெறும் வசதியைப் பெறுகின்றனர்.
ஆனால் தற்போது இந்த பொங்கல் பரிசுத்தொகை அவர்கள் (சொந்த நியாய விலை கடை ) ஏற்கனவே எந்த ஊரில் ரேஷன் விபரங்கள் பதிந்து வாங்கினார்களோ அந்தப் பகுதி நியாயவிலைக் கடைகளில் மட்டுமே வாங்க முடியும் என்பதால் இந்த 3000 மணம் பெற தங்கள் கைப்பணத்தை செலவு செய்து தங்கள் பகுதி ஊர்களுக்கு செல்லும் நிலையில் உள்ளனர்.இதற்கு எவ்வித மாற்றுவழியும் இல்லை என்பதால் வேறு வழியின்றி ரேஷன் அட்டையில் பெயர் இருப்பவர்களில் ஒருவர் பரிசுத்தொகை பெற பயணத்திற்கு ஆயத்தமாக உள்ளனர்.
இந்நிலையில் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு ஜனவரி 8ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரேஷன் கடைகளில் ஒருநாளைக்கு 500 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஜனவரி 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த நாளுக்கு பதிலாக பிப்ரவரி 7ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
வெளியூர்களில் வசிப்பவர்கள் வந்து வாங்க வசதியாக இந்த மாதம் முழுவதும் இந்த பரிசுத்தொகை வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.