

2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு (பச்சரிசி, சர்க்கரை, கரும்பு) குறித்த அறிவிப்பைத் தமிழக அரசு இன்று அல்லது நாளை வெளியிட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு விதமாகப் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 2022-ல் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பும், கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் தலா ₹1,000 ரொக்கப்பணமும் வழங்கப்பட்டன. ஆனால், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டு (2026) பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்புடன் சேர்த்து கணிசமான அளவு ரொக்கப் பணம் வழங்கப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. இந்தத் தொகை ₹3,000 அல்லது ₹4,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அல்லது நாளை வெளியிட வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பரிசை தடையின்றி வழங்கத் தேவையான ஏற்பாடுகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. சுமார் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்காக 2.22 கோடி கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1.77 கோடி வேட்டிகளும், 1.77 கோடி சேலைகளும் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அதில் 85 சதவீதப் பொருட்கள் ஏற்கனவே ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முறைப்படுத்த, ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த டோக்கனில் குறிப்பிட்டிருக்கும் நாள் மற்றும் நேரத்தில் பொதுமக்கள் சென்று தங்களுக்குரிய பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.