

தமிழ்நாட்டில் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு சார்பில் எவ்வளவு பரிசுத்தொகை கொடுக்கப்படும் என்பது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
தற்போது வரை ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.3,000 வழங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ரூ.5,000 வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கோரிக்கை எடுத்துள்ளார். மேலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், பொங்கலுக்கு ரூ.5,000 வழங்குவேன் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 2.22 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவதில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி தற்போது பச்சரிசி, சர்க்கரை, வேட்டி மற்றும் சேலை உள்ளிட்ட பொருள்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகள் 85% வரை நிறைவு பெற்றுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெகு விரைவில் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் கரும்பு உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வெகு விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை தமிழக ரேஷன் கடைகளுக்கு 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,77,22,000 வேட்டிகள் மற்றும் 1,77,64,000 சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, வெல்லம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பல பொருள்கள் இருக்கும். மேலும் தமிழக அரசின் நிதித் தேவைக்கு ஏற்ப பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் பரிசுத் தொகையாக தமிழக அரசு வழங்கியது. 2025 பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை மட்டுமே வழங்கியது தமிழக அரசு. இந்நிலையில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால் 2026 பொங்கல் பண்டிகைக்கு ரூ.3,000 பரிசுத் தொகையை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது பச்சரிசி, சர்க்கரை, வேட்டி மற்றும் சேலை உள்ளிட்ட தகவல்கள் மட்டுமே தற்போது வெளியாகி உள்ள நிலையில், இந்த வார இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசுத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.
ஜனவரி 10ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசுத் தொகையை தமிழ்நாடு முழுக்க விநியோகம் செய்து முடிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. எப்போதும் போலவே டோக்கன் முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை விநியோகிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தாயுமானவர் திட்டத்தின் படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வீடு தேடி வரம் உள்ளது.
இது தவிர ஜனவரி மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையையும் பொங்கல் பண்டிகைக்கு முன்னரே பயனாளிகளின் வஙகிக் கணக்கில் வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது