

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் என்னென்ன வழங்கப்படும் என பொதுமக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால், 2026 பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்கப் பணமும் வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் மண்பானையை சேர்க்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, கரும்பு, வெல்லம் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். தற்போது இந்த பரிசுத் தொகுப்புடன் மண்பானையை வழங்கினால், அது மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான அடித்தளமாக அமையும்.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாக மண்பாண்ட தொழில் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொங்கல் பரிசுத் தொகுப்பில் மண்பானையை சேர்க்க வேண்டும் என தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறோம்.
கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டது. அதேபோல் பரிசுத் தொகுப்பில் மண்பானையும், அடுப்பும் சேர்க்கப்பட்டால் நிச்சயமாக எங்களின் வாழ்வாதாரம் முன்னேற்றத்தைக் காணும். அதோடு பொங்கல் பண்டிகைக்கு மண்பானை பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பதால், தமிழக அரசு இது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும்.
பருவமழை காலங்களில் மண்பாண்ட தொழிலை செய்வதில் அதிக சிரமங்கள் இருப்பதால், இந்நேரத்தில் எங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்படும். இதன் காரணமாக தமிழக அரசு ஆண்டுதோறும் மழைக்கால நிவாரணமாக ரூ.5,000-ஐ வழங்குகிறது. இந்த நிவாரணத் தொகையை ரூ.7,000 ஆக உயர்த்திக் கொடுத்தால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும். மேலும் இன்னும் சிலருக்கு மழைக்கால நிவாரணம் தொகை வந்து சேரவில்லை. இதில் ஏற்படும் கால தாமதத்தையும் தமிழக அரசு நிவர்த்தி செய்ய வேண்டும்.
மண்பாண்ட தொழிலாளர்களின் நலனுக்காக நல வாரியம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் விடுபட்ட தொழிலாளர்களுக்கு விரைந்து அடையாள அட்டை வழங்கிட வேண்டும். மேலும் நீர் நிலைகளில் மண்பாண்டம் செய்வதற்குத் தேவையான அளவு களிமண்ணை தொழிலாளர்கள் எடுப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்” என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2026 பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வெகு விரைவில் பரிசுத்தொகுப்பு குறித்த விவரங்களை அறிவிக்க உள்ளது. இந்நிலையில் மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டால், ரேஷன் கடையில் நிச்சயமாக வரும் பொங்கலுக்கு மண்பானையும் வழங்கப்படும்.
இருப்பினும் மண்பானையைக் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைத்தல் வரையிலான செயல்கள் குறித்து ஆலோசனை செய்த பிறகு தமிழக அரசு இதில் முடிவெடுக்கும் என தெரிகிறது.