

மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதிலும் குறிப்பாக பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து அதை சிறப்பாகவும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் முக்கியத் திட்டங்களில், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான கல்விக்கான மகிளா சமக்யா திட்டம், மற்றும் ஏழைப் பெண்களுக்குக் கடனுதவிக்கான ராஷ்டிரிய மகிலா கோஷ் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த வகையில் ஏழை பெண்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்தது தான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) என்பது, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில், குறிப்பாக பெண்களுக்கு, மானிய விலையில் எல்பிஜி (சமையல் எரிவாயு) இணைப்புகளை வழங்குவதற்கான ஒரு மத்திய அரசுத் திட்டமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஏழை பெண்களுக்கு 300 ரூபாய் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டரை வழங்குகிறது.
சாமானிய மக்களின் அத்தியாவசிய பொருட்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது கேஸ் சிலிண்டர். சாதாரண மக்களுக்கு மானியம் இல்லாத ஒரு சிலிண்டரின் விலை ₹868.50 ரூபாய்க்கு கிடைக்கும் அதேவேளையில் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 550 ரூபாயாக இருக்கும். தற்போது, 10 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தினை (PMUY) 2025-26 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், தகுதியானவர்களுக்கு மட்டுமே இந்த மானியத் தொகை கிடைக்கும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சில நிபந்தனைகள் உண்டு.
* வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
* பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
* முக்கியமாக, விண்ணப்பிக்கும் பெண்ணின் பெயரில் ஏற்கனவே சிலிண்டர் இணைப்பு இருக்கக்கூடாது.
தேவையான ஆவணங்கள் :
ஆதார் அட்டை
மொபைல் நம்பர்
ஜன்தன் கணக்கு எண்
ரேஷன் கார்டு
வங்கி கணக்கு விவரங்கள்
விண்ணப்பிப்பது எப்படி?
விநியோகஸ்தர் அலுவலகம் (LPG distributor) மூலமாகவோ அல்லது ஆன்லைன் போர்ட்டல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
www.pmuy.gov.in. என்ற இணையதளத்திற்கு சென்று ‘புதிய உஜ்வாலா 2.0 இணைப்புக்கு விண்ணப்பிக்கவும்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்துடன், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரங்கள், மற்றும் பிற தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
இந்த விண்ணப்பத்தை அருகிலுள்ள சமையல் கேஸ் விநியோகஸ்தரிடம் (LPG distributor) சமர்ப்பிக்கவும்.
மேலும் இந்த இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன் இந்த திட்டம் சார்ந்த விதிமுறைகளை படித்து அறிந்து கொள்வது நல்லது.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம், ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும் சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கான செலவு கணிசமாக குறைகிறது.