

தற்போது உள்ள காலக்கட்டத்தில், விலை உயர்வு அல்லது பணவீக்கம் சாதாரண மக்களையும் கடுமையாக பாதிக்கிறது. இதுபோன்ற காலக்கட்டத்தில், எந்த ஆபத்தும் இல்லாமல் பாதுகாப்பான முதலீடு செய்வது என்பது எளிதல்ல. நீங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றால், உங்களுக்கான சிறந்த வழி போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது தான். இந்தியாவில் சேமிப்பு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது போஸ்ட் ஆபிஸ் தான்.
ஏனெனில், இங்குள்ள திட்டங்கள் அதிக வட்டியுடன் பாதுகாப்பான முதலீட்டுக்கான உத்தரவாதத்தையும் வழங்குகின்றன.அந்த வகையில் இந்திய போஸ்ட் ஆபீஸ் (Post Office) பாதுகாப்பான மற்றும் அதிக வட்டி தரும் பல்வேறு சேமிப்புத் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இதில் உள்ள பல சேமிப்பு திட்டங்களில், மாதாந்திர வருமான திட்டம் (MIS)தனித்துவமானது. இதில் ஒருமுறை மட்டும் முதலீடு செய்தால் போதும், அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கிற்கு நிலையான வட்டி வருமானம் வந்துகொண்டே இருக்கும்.
உங்களுடைய பணத்தை ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும், நாம் போட்ட பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அந்த பணத்தில் இருந்து மாதம்தோறும் வருமானம் வர வேண்டும் என்றால் போஸ்ட் ஆபிஸில் இதற்கான ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. வாங்க அதுகுறித்து அறிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் உங்கள் பணம் பாதுகாப்பாக, எந்த ஆபத்தும் இல்லாமல் இருக்கும். மேலும், உங்கள் பணத்திற்கு அரசாங்க உத்தரவாதம் கிடைப்பதால், பணம் மூழ்கிவிடும் என்ற பயம் இல்லை. இது மத்திய அரசு திட்டம் என்பதால் உங்களுடைய அசல் தொகையும் பாதுகாப்பாக இருக்கும் என்பது மட்டுமில்லாமல், மாதம் தோறும் உங்களுக்கு அதிலிருந்து வருமானம் வரும் என்பதால் உங்களின் வாழ்வாதாரத்திற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த திட்டத்தில் ஒரே ஒருமுறை உங்கள் பணத்தை முதலீடு செய்தால் போதும். நம்முடைய அசல் தொகை பாதுகாப்பாக இருப்பதுடன் மாதந்தோறும் அந்த முதலீட்டில் இருந்து வட்டியாக பணம் வந்து கொண்டே இருக்கும்.
மாதந்தோறும் வருமானம் கிடைக்கும் இந்த திட்டத்தின் பெயர் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் (post office monthly income scheme)(POMIS) எனப்படும் சேமிப்பு திட்டமாகும்.
தகுதிகள், கிடைக்கும் நன்மைகள்..
* இந்தியாவை சேர்ந்த 18 வயது நிரம்பிய எந்த குடிமகனும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முடியும்.
* ஐந்தாண்டு காலம் இந்த திட்டத்திற்கு முதிர்வு காலமாக அறிவிக்கப்பட்டிருப்பதுடன், தற்போது ஆண்டுக்கு 7.4% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு ஓராண்டுக்கு 7.4% என்ற அளவில் வட்டியை கணக்கிட்டு அதனை 12 மாதங்களுக்கும் பிரித்து உங்களுடைய கணக்கில் வரவு வைத்து விடுவார்கள்.
* இந்த திட்டத்தில் சேர தனிநபர் ஆகவோ அல்லது கூட்டு கணக்கு (Joint account)முறையிலும் முதலீடு செய்யலாம். கூட்டு கணக்கு முறையில் மூன்று பேர் வரை சேர்ந்து ஒரே கணக்கில் பணத்தை போட முடியும்.
* தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டு கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்து, ஒவ்வொரு மாதமும் உறுதியான வட்டி வருமானத்தைப் பெறலாம்.
* இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். முதிர்வு காலத்திற்குப் பிறகு முதலீடு செய்த முழு தொகையும் உங்களுக்குத் திரும்ப அளிக்கப்படும்.
* இதுவே தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் ரூ.5,550 கிடைக்கும்.
* ரூ.15 லட்சம் கூட்டு கணக்கில் (Joint account) முதலீடு செய்தால், மாதந்தோறும் தோராயமாக ரூ.9,250 வரை வட்டி வருமானம் பெற முடியும்.
* எதிர்பாராத காரணங்களால் முன் கூட்டியே கணக்கை மூடுவதாக இருந்தால் கணக்கைத் திறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு அபராதம் செலுத்தி கணக்கை மூடலாம்.
கணக்கு தொடங்குவது எப்படி?
* இந்த திட்டத்தில் சேருவதற்கு முன்னர் உங்களுக்கு போஸ்ட் ஆபிஸில் ஒரு சேமிப்பு கணக்கு இருக்க வேண்டியது அவசியம். போஸ்ட் ஆபிஸ் சென்று விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து இந்தி திட்டத்தில் சேரலாம்.
இந்தத் திட்டம் ஓய்வு பெற்றவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் நிலையான மாதாந்திர வருமானம் தேவைப்படுபவர்களுக்கு ஏற்ற மிகச் சிறந்த மற்றும் குறைந்த ஆபத்துள்ள (Low-risk) முதலீட்டுத் திட்டமாகும். ஓய்வு பெற்றவர்கள் தங்களுடைய ஓய்வூதிய தொகையை இதில் முதலீடு செய்துவிட்டு மாதந்தோறும் வரக்கூடிய வருமானத்தை எடுத்து செலவுகளை பார்த்துக் கொள்ளலாம்.