
இந்திய அஞ்சல் துறை நாடு முழுவதும் பொது மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. முதலீடு மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் உட்பட தபால் சேவையிலும் அஞ்சல் துறை முன்னணியில் உள்ளது. சமீபத்தில் பதிவு அஞ்சலை ரத்து செய்த அஞ்சல் துறை தபால் சேவைடெலிவரியை நவீனமயமாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒரே நாளில் டெலிவரி சேவையை வழங்க இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வரும் இன்றைய காலகட்டத்தில் டெலிவரி சேவைகள் நாட்களைக் கடந்து சில மணி நேரங்கள் இந்த வட்டத்துக்குள் வந்து விட்டன. அதற்கேற்ப இந்திய அஞ்சல் துறையும் பொதுமக்களுக்கு தபால் சேவையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தபால் சேவையை தொடங்க இந்திய அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. இந்த சேவையை வெறும் 24 மணி நேரத்திற்குள் வழங்க உள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தகவல் தெரிவித்துள்ளார்.
பொதுவாக அஞ்சல் துறை மூலம் ஒரு பார்சலை அனுப்பினால் அது சென்றடைய மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை ஆகும். இந்த கால விரயத்தை குறைக்க இந்திய அஞ்சல் துறை தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் இந்தியா போஸ்ட் நிறுவனத்தின் டெலிவரி சேவை 24 மற்றும் 48 மணி நேரங்களாக குறைக்கப்பட்டுள்ளது. தனியார் பார்சல் சேவைக்குப் போட்டியாக இந்திய அஞ்சல் துறையும், தற்போது தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான ஜோதிராதித்ய சிந்தியா மேலும் கூறுகையில், “ அடுத்த ஆண்டு முதல் இந்திய அஞ்சல் துறை ஒரு புதிய பயணத்தைத் தொடங்க உள்ளது. 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஸ்பீட் போஸ்ட் சேவையை அஞ்சல் துறை தொடங்க உள்ளது. இந்தப் பயணத்தின் மூலம் பொது மக்களுக்கு தபால் சேவை 24 மணி நேரத்திற்குள்ளும், பார்சல் சேவை 48 மணி நேரத்திற்குள்ளும் கிடைக்கும்.
இதன்படி பார்சலைப் பெற்ற அடுத்த நாளிலேயே அதனை இந்திய அஞஅசல் துறை அதனை டெலிவரி செய்து விடும். இந்தியா போஸ்ட் நிறுவனத்தின் வருவாய் தற்போது குறைவாக இருப்பதால் செலவு மையமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஞ்சல் துறையை செலவு மையத்தில் இருந்து லாப மையமாக மாற்ற உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஸ்பீட் போஸ்ட் திட்டம் உதவும். இதன்படி வருகின்ற 2029 ஆம் ஆண்டுக்குள் இந்தியா போஸ்ட் நிறுவனத்தை லாபகரமான மையமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் கூறினார்.
தபால் சேவைகளை விரைவுபடுத்துதல், நவீன மயமாக்குதல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்திய அஞ்சல் துறையை முன்னேற்றம் காணச் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் நாடு முழுக்க நம்பகமான மற்றும் வேகமான டெலிவரியை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தான் ஒருநாள் டெலிவரி சேவையை அஞ்சல் துறை தொடங்க உள்ளது.