

ஒரு லட்சத்தையும் தாண்டி தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மக்கள் அதை எப்படிப் பாதுகாப்பது என்று சிந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழலில், தற்செயலாகக் கையில் கிடைத்த பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளுக்குத் தான் உரிமையாளர் என ஆசைப்படாமல், நேர்மையுடன் அவற்றை உரியவரிடம் ஒப்படைக்கப் பெரிய மனது வேண்டும்.
அப்படி ஒரு நேர்மையான குணம் கொண்டவர் தான் துப்புரவு பணியாளரான சென்னையைச் சேர்ந்த பத்மா. சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பத்மா என்பவர் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஜனவரி 11-ஆம் தேதி சென்னை தி.நகர் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை உடனடியாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதுதொடர்பாக காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் அந்த நகைகள் நங்கநல்லூரை சேர்ந்த அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த செய்தி வெளியானதும் நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவுப் பணியாளர் பத்மாவுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக வைரலாகி அவருக்கு பாராட்டுகள் பெருமளவில் குவிந்தது.
குறிப்பாக தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோதும் நேர்மையுடன் பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததை தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, பரிசுத்தொகையாக ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
வேலம்மாள் நெக்சஸ் குழுமத்தின் சார்பில் "நேர்மைத் தாரகை" விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. லலிதா ஜூவல்லர்ஸ் நிறுவனர் நேரில் அழைத்து பரிசு அளித்தார். இப்படி பல்வேறு நிறுவனங்களின் பரிசுகள் பாராட்டுகள் பத்மாவுக்கு வழங்கப்பட்டது. சமூக ஊடகங்களில் பரவலாகப் பாராட்டப்பட்டு, அவருக்கு "நேர்மையின் அடையாளம்" என்ற அங்கீகாரம் கிடைத்தது.
இதற்கெல்லாம் மணிமகுடம் சூடியது போல் பத்மாவின் நேர்மையைப் பாராட்டும் வகையில், தமிழக அஞ்சல் துறையின் மத்திய கோட்டம், அவரது புகைப்படத்துடன் கூடிய சிறப்பு தபால் தலை ஒன்றை வெளியிட்டு கௌரவித்துள்ளது.சென்னை மத்திய கோட்டம் தமிழக அஞ்சல் துறை சார்பில், பத்மாவின் நேர்மையைப் போற்றும் விதமாக அவரது புகைப்படத்துடன் கூடிய சிறப்பு தபால் தலை (மை ஸ்டம்ப்) ஒன்றை அவரது கைகளாலேயே வெளியிட்டு அவரைக் கௌரவித்துள்ளனர். மேலும், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி சார்பில், அவரது பெயரில் பிரீமியம் சேமிப்புக் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீடு வழங்கப்பட்டு அதற்கான ஆவணங்களை மத்திய அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் விஷ்ணுராஜ், பத்மாவிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்மாவின் நேர்மையும் சமூகப் பொறுப்புணர்வும் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளதுடன் நேர்மைக்கு நிச்சயமாக அங்கீகாரம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.