மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதில் மியான்மரில் 103 பேர்களும் தாய்லாந்தில் 4 பேர்களும் உயிரிழந்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் ஆங்காங்கே கடுமையான புயல், வெயில், நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக உலகம் முழுவதும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்துகிறது. அந்தவகையில், கடந்த ஜனவரி மாதம் நேப்பாள எல்லையில் அமைந்துள்ள டிங்ரி பகுதியில் 7.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தவகையில் தற்போது இதைவிட பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவான இந்நிலநடுக்கம் இந்தியாவின் கொல்கத்தா, மணிப்பூர் மற்றும் சீனா, வங்கதேச பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தாய்லாந்து மற்றும் மியான்மரில் கட்டடங்கள் அனைத்தும் சீட்டுக் கட்டுகள் போல் சரிந்து விழுந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் கடுமையான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.
மியான்மரில் 350 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை பன்மடங்கு உயரும் என்று அஞ்சப்படுகிறது.
தாய்லாந்தில் முழுவதுமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மியான்மரில் முற்றிலுமாக இணைய சேவை முடங்கியுள்ளதால், அங்கு என்ன நடக்கிறது என்பது வெளியுலகத்துக்கு அவ்வளவாக தெரியவில்லை.
பாங்காக்கில் பலி எண்ணிக்கை குறித்தான செய்திகள் வெளியிடப்படவில்லை. கட்டடம் கொஞ்சம் அசையும்போதே முன்னெச்சரிக்கையாக மக்கள் வெளியே வந்துவிட்டார்கள்.
இன்று மதியம் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
சமீபகாலமாக இந்தியாவில் தொடர்ச்சியாக சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தவையாக இல்லை.
இப்போது தாய்லாந்து மற்றும் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தான் மிகப்பெரியது. ஆனால், இதில் மிக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக மியான்மர் இருக்கிறது. இன்னும் அங்கு நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள கட்டடங்களை அகற்றினால் மட்டுமே சரியாக எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது தெரியவரும்.