
ரஷ்யாவில் இன்று ஏற்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம், மற்ற நாடுகளையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் அமெரிக்கா உள்பட பிலிப்பைன்ஸ், பலாவ் மற்றும் மார்ஷல் தீவுகளில் சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்க வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய நாட்டின் கம்சத்கா எனும் தீபகற்ப பகுதியில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி மக்களை அச்சுறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டு சுனாமி எச்சரிக்கை மையங்கள் சுனாமிக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளன.
சுனாமி எச்சரிக்கை குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட அறிக்கையில், “லட்சக்கணக்கான மக்கள் வசிக்கக் கூடிய அவச்சா எனும் கடலோர நகரத்தில், கம்சாத்ஸ்கை எனும் பகுதிக்கு கிழக்கு-தென்கிழக்கு திசையில் 125கி.மீ. தொலைவில் 19.3கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. இப்பகுதியில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் தீவிரமான சுனாமி அலைகள் எழும்பக் கூடும். இதன் விளைவாக பலாவ், பிலிப்பைன்ஸ், மார்ஷல் தீவுகள், கொஸ்ரே மற்றும் சூக் போன்ற பகுதிகளில் 3.3 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழ வாய்ப்புண்டு” என எச்சரித்துள்ளது. பிறகு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் பதிவானது 8.0 தான் என தனது அறிவிப்பை திருத்திக் கொண்டது.
அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்து கம்சத்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்துள்ளன. இதனால் பலரும் சுனாமி வருமோ என்று அச்சத்தில் உள்ளனர். திடீரென ஏற்படும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை போன்றவை காலநிலை மாற்றத்தின் விளைவாக இருக்கக் கூடும் என வானிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஜப்பான் வானிலை மையமும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவான், வடகொரியா மற்றும் தென்கொரியாவில் 1 அடிக்கும் மேல் சுனாமி அலைகள் எழும்பும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஜப்பானின் கடலோரப் பகுதிகளில் 3 அடிக்கும் மேல் சுனாமி அலைகள் எழுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன என எச்சரித்துள்ளது.
நிலநடுக்கம் மற்றும் சுனாமி குறித்து ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசரக் குழு ஒன்றைத் தயார் நிலையில் வைக்க மும்முரமாக செயல்பட்டு வருகிறது ஜப்பான் அரசு.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல அந்தந்த நாடுகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றன. மேலும் பொதுமக்கள் யாரும் கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.