
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா அல்லது PMMVY திட்டத்தின் கீழ் உங்களின் முதல் குழந்தையின் பிறப்புக்கு ரூ.5000, இரண்டாவது குழந்தை பெண்ணாக இருந்தால் ரூ.6000 வழங்கப்படும்.
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அவற்றில் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்று அழைக்கப்படுகின்ற பிரதமரின் தாய்மை போற்றுவோம் திட்டம், கருவுற்றிருக்கும் பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதையும், குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காகவும் தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவுவதற்காகவே பிரத்யேகமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது.
இந்த திட்டம் 2010-ம் ஆண்டு இந்திரா காந்தி மாத்ரித்வா சஹ்யோக் யோஜனா (IGMSY)’ என்ற பெயரில், அப்போதைய பிரதமரான மன்மோகன் சிங் அவர்களால் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ‘பிரதமரின் தாய்மை போற்றுவோம் திட்டம்’ என்று பெயம் மாற்றம் செய்யப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு முதல் PMMVY என்ற பெயரில் பிரதமர் மோடியால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதமரின் தாய்மை போற்றுவோம் திட்டம் இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ. 5,000 வழங்கப்படுகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. IGMSY திட்டத்திற்கு, 100% மத்திய அரசால் நிதியளிக்கப்பட்டு வருகிறது.
கூலி வேலைக்கு செல்லும் பெண்கள், கர்ப்ப காலத்தில் வேலைக்கு போகமுடியாமல், பொருளாதார பிரச்சனையாலும், சத்தான சரிவிகித உணவு சாப்பிட முடியாமலும் கஷ்டப்படுவார்கள். இது போன்ற பெண்களை மனதில் வைத்து மத்திய அரசு இந்த மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் நலியுற்ற பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற முடியும். இந்தப் பணம் பயனாளியின் வங்கி கணக்கு அல்லது அஞ்சல் கணக்கில் மூன்று தவணைகளாக ரூ.5000 நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
சில குடும்பங்களில் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக பிறந்து விடுமோ என்ற அச்சத்தில் 2-வது குழந்தையை பெற்று கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையிலும், மற்றும் பெண் குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காகவும் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், இந்த திட்டத்தின் கீழ் ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு குடும்பத்தின் முதல் குழந்தைக்கு (ஆண்/பெண்) ரூ.5000-ம், இரண்டாவது பெண் குழந்தையாக மட்டும் இருக்கும்பட்சத்தில் அதற்கு ரூ.6000-ம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பத்தில் உள்ள பெண்கள் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பலன் பெற முடியும். அதேபோல, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான பிபிஎல் ரேஷன் கார்டு இருக்க வேண்டும். அல்லது ஆயுஷ்மான் பாரத் யோஜனா கார்டு இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள் :
இந்த திட்டத்தின் கீழ் பலன் பெற பெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
MCP அட்டை (Last Menstrual Period)
பயனாளியின் ஆதார் அட்டை,
குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்,
முகவரிச் சான்று,
வருமானச் சான்றிதழ்,
சாதிச் சான்றிதழ்,
பான் கார்டு,
வங்கிக் கணக்கு புத்தகம்,
மொபைல் நம்பர்,
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
இந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்லைனில் அங்கன்வாடி மையத்திலோ (AWC) அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சுகாதார மையத்திலோ இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பலன் பெறுவதற்கு பெண்கள் https://pmmvy.wcd.gov.in/ என்ற இந்த இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிப்பதற்கும் உங்களுக்கு தேவையான விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
2017-18 முதல் 2021-22 வரை மொத்தம் 2,57,60,007 பெண்களும், 2023-24 நிதியாண்டின் போது, 53,76,728 பெண்களும் பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.
இந்த் திட்டத்தின் மூலம் 4 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் ஏற்கனவே ரூ.19,000 கோடிக்கும் அதிகமான நேரடி உதவி தொகையை பெற்றுள்ளனர்.