இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடந்த 2022ம் ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பஞ்சத்தினால் மக்கள் பெரிய அளவு பாதிக்கப்பட்டனர். சாதாரண, அத்தியாவசிய பொருட்கள் கூட அதிக விலையில் விற்கப்பட்டன. இந்த விலை உயர்வு மக்களை மிகவும் கோபமடைய செய்தது. இதனால், கொந்தளித்த மக்கள் அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருபக்கம் பொருளாதார ரீதியாக நெருக்கடியை சந்தித்த இலங்கை அரசுக்கு மக்கள் போராட்டம் மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது.
தீவிரமடைந்த மக்கள் போராட்டம் ஒருகட்டத்தில் இலங்கை அதிபர் மாளிகை ஆக்கிரமிப்பு வரை சென்றது. இதனால் இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். அதன்பின்னர், அவர் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே அதிபராகப் பொறுப்பேற்றார். அவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.
இந்தநிலையில்தான், அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலை பற்றிய அறிவிப்பை அந்த நாடு அறிவித்திருக்கிறது. அதன்படி இலங்கையின் இந்த ஆண்டிற்கான அதிபர் தேர்தல், செப்டம்பர் 17ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 16ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என்றும், அவரை எதிர்த்து தற்போது அவரது மந்திரி சபையில் நீதி மந்திரியாக இருக்கும் விஜேயதாச ராஜபக்சே போட்டியிடுவார் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம், முடிவு தேதி போன்ற அனைத்து அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
சமீபத்தில் ரஷ்ய அதிபர் 5வது முறையாக தேர்தலில் வெற்றிபெற்று அதிபரானார். இதனையடுத்து தற்போது இலங்கையின் அடுத்த அதிபர் யார் என்பதை எதிர்பார்த்துதான், இந்தியாவும் மற்ற உலக நாடுகளும் காத்துக் கொண்டிருக்கின்றன.