
இந்தியாவில் நீரிழிவு மற்றும் தொற்று நோய்களுக்கான மருந்துகள் உள்பட மொத்தம் 71 மருந்துகளின் விலையைக் குறைத்துள்ளது மத்திய அரசு. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) மருந்துகளின் குறைக்கப்பட்ட புதிய விலைகளை தற்போது அறிவித்துள்ளது. மருந்து விலைக் கட்டுப்பாட்டு விதிகளின் வரம்புக்கு உட்பட்டு இந்த விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மருந்துகளின் மலிவு விலை மற்றும் எளிதான அணுகலை உறுதி செய்ய, சில்லறை விலைகளைத் தொடர்ந்து கண்காணித்து நிர்ணயிக்கும் ஒரு அதிகார அமைப்பு தான் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம். இந்த ஆணையம் மக்களுக்கு அதிகம் தேவைப்படும் 71 மருந்துகளின் விலையை தற்போது குறைத்துள்ளது. விலை குறைக்கப்பட்ட 71 மருந்துகளில் மெட்டாஸ்டேடிக் மார்பகப் புற்றுநோய், கடுமையான தொற்றுநோய்கள், வயிற்றுப் புண்கள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் மருந்துகளும் அடங்கும்.
மெட்டாஸ்டேடிக் மார்பகப் புற்றுநோய் மற்றும் இரைப்பை புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் டிராஸ்டுஜூமாப் மருந்தை ரிலையன்ஸ் ஆஃப் சயின்சஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதன் விலை தற்போது ஒரு குப்பி ரூ.11,966 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
டோரன்ட் பார்மாசூட்டிகல்ஸ் தயாரிக்கும் எசோமேபிரசோஸ், கிளாரித்ரோமைசின் மற்றும் அமோக்ஸிசிலின் ஆகியவற்றின் கலவை மருந்து பெப்டிக் அல்சர் நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இதன் விலை ஒரு மாத்திரைக்கு ரூ.162.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தூள் வடிவில் இருக்கும் டைகெமில் கூட்டு மருந்து ஒரு குப்பியின் விலை ரூ.515.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டிசோடியம் எடிடேட், செஃப்டிரியாக்சோன் மற்றும் சல்பாக்டம் பவுடர் கொண்ட காம்பிபேக் மருந்து உயிருக்கு ஆபத்தான தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இதன் விலை தற்போது ஒரு குப்பி ரூ.626 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள விலைக் குறைப்பில் எம்பாக்ளிஃப்ளோசின் கொண்ட 25 நீரிழிவு நோயெதிர்ப்பு மருந்துகளும் அடங்கும்.
மருந்து உற்பத்தியாளர்கள் மருந்துகளின் திருத்தப்பட்ட விலைப் பட்டியலை மத்திய அரசு, டீலர்கள் மற்றும் மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் மருந்துகளின் விலையில் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்கும் என தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட மருந்துகளின் விலைப் பட்டியலை மருந்தகங்கள் காட்சிப்படுத்த வேண்டியது அவசியம். NPPA நிர்ணயித்த அளவில் மருந்துகள் விற்கப்படுகின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ள பொதுமக்களுக்கு இது உதவியாக இருக்கும். இந்த விதிகள் ஆன்லைன் மருந்து விற்பனைத் தளங்களுக்கும் பொருந்தும் எனவும் NPPA தெரிவித்துள்ளது.