கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

Hospital
Compounder
Published on

1990 காலகட்டத்தில் ஒரு மருத்துவமனைக்கு ஒரு கம்பவுன்டர் இருந்தார். ஆனால், இப்போது கம்பவுன்டர் என்ற வார்த்தையைக் கூட கேட்க முடிவதில்லை. இதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும்? மருத்துவ உலகின் அபரிமிதமான வளர்ச்சியா அல்லது மருத்துவப் படிப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றமா? விடையெதுவென அறிந்து கொள்வதற்கு முன் கம்பவுன்டர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? தெரிந்துகொள்வோம்!

முன்பெல்லாம் நம் வீடுகளுக்கு அருகில் ஏதேனும் ஒரு பொது மருத்துவமனை இருந்தால், நிச்சயமாக அங்கு கம்பவுன்டர் என்று ஒருவர் இருப்பார். மருத்துவர் வருவதற்கு முன்பே, கம்பவுன்டர் வந்து மருத்துவமனையைத் திறந்து வைத்து விடுவார். நோயாளிகள் மருத்துவர் இன்னும் வரவில்லையா என கேட்கும் போது, அமருங்கள் சற்று நேரத்தில் வந்து விடுவார் என பதில் சொல்லும் கம்பவுன்டர்கள் தான், மருத்துவர் இல்லாத நேரங்களில் சிறு சிறு வலிகளுக்கு நிவாரணி மாத்திரைகளை வழங்குவார். புதிதாக மருத்துவர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை விடவும், அனுபவம் நிறைந்த கம்பவுன்டர்களுக்கு நிறையவே தெரிந்திருக்கும். மேலும் இளவயது மருத்துவரைக் காட்டிலும், மருந்துக் கலவைச் செய்வதில் கம்பவுன்டரை மக்கள் அதிகமாக நம்புவார்கள்.

அப்போதெல்லாம் மழைக் காலங்களில் காய்ச்சல், சளி மற்றும் இருமல் ஏற்படும் போது, கம்பவுன்டர்களிடம் மாத்திரையை வாங்கிச் சாப்பிட்டவர்கள் ஏராளம். மருத்துவர் எங்கேனும் வெளியூருக்குச் சென்று விட்டால், நோயாளிகளின் நாடியைப் பிடித்து மருந்துகளைப் பரிந்துரைப்பார் கம்பவுன்டர்.

1980-1990 காலகட்டங்களில் மருந்து மாத்திரைகள் மற்றும் தைலத்தை மிகச் சரியான முறையில் கம்பவுன்டிங் செய்ய வேண்டியது அவசியமாக இருந்தது. மருத்துவத் துறையில் கம்பவுன்டிங் என்றால் சேர்மமான முறை என்று அர்த்தம். பத்தாம் வகுப்பு முடித்து விட்டு, அதன் பிறகு கம்பவுன்டிங் துறையில் டிப்ளமோ படித்தவர்களைத் தான் நாம் கம்பவுன்டர் என அழைக்கிறோம். சரியான கலவையில் நோயாளிகளுக்கு மருந்தைக் கலந்து கொடுப்பதே இவருடைய முக்கிய வேலையாகும்.

மருத்துவமனையில் மருந்துக் கலவைத் தயாரிக்க கம்பவுன்டருக்கு ஒரு தனி அறை இருக்கும். மருந்துக் கலவையை நோயாளிகளுக்கு கொடுத்து, எப்போது, எப்படி சாப்பிட வேண்டும்; மருந்தைப் பயன்படுத்தும் முறை மற்றும் பக்க விளைவுகள் குறித்து எடுத்துரைப்பார். இந்த மருந்துகளின் நிலைத்தன்மை குறைவாக இருக்கும் என்பதால் 4 முதல் 5 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும். ஆனால், இன்றைய மருத்துவ உலகின் வளர்ச்சியால் மருந்துகள் நேரடியாகவே விற்பனைக்கு வருகின்றன. இதனால் கம்பவுன்டர்களின் தேவையும் குறைந்து விட்டது.

இதையும் படியுங்கள்:
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள் - என்னென்ன வாய்ப்புகள்? மாணவர்களே, இத தெரிஞ்சுக்கோங்க!
Hospital

அதேநேரம் மருத்துவப் படிப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், இன்று கம்பவுன்டர்கள் இல்லாமல் போனதற்கு ஒரு காரணம் எனலாம். மருந்துத் தயாரிப்புத் துறையில் கம்பவுன்டிங் படிப்புகள் இப்போது இல்லை. அதற்குப் பதிலாக 5 வருட பார்மஸிஸ்டு இளங்கலைப் பட்டப்படிப்புகள் வந்து விட்டன. இப்படிப்பைப் முடித்தவர்கள் தான், தற்போது மருந்துக் கலவைத் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்.

மிகவும் குறைந்த சம்பளத்தில் நம் நோய், நொடிகளைத் தீர்த்து வைத்த கம்பவுன்டர்களைக் காணவே முடிவதில்லை. காலவோட்டத்தில் கம்பவுன்டர்கள் இல்லாமல் போனாலும், இவர்களிடம் மருந்து வாங்கி சாப்பிட்ட பலருக்கும் கம்பவுன்டர்களின் நினைவுகள் மனதில் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com