‘காணாமல் போனவர் வரிசையில் பிரதமர் மோடியும் விரைவில் இணைவார்’ டி.ஆர்.பாலு ஆவேசம்!

'Prime Minister Modi will soon join the ranks of the missing' T.R. Balu raves
'Prime Minister Modi will soon join the ranks of the missing' T.R. Balu raveshttps://gemlive.tv

‘திமுகவை இல்லாமல் ஆக்கிவிடுவோம் என்று கூறிய பலரும் வரலாற்றில் காணாமல் போய் இருக்கிறார்கள். அந்த வரிசையில் விரைவில் பிரதமர் மோடியும் இணைவார்’ என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆவேசமாகக் கூறி இருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது…

“அரசுமுறைப் பயணமாகத் தமிழ்நாட்டுக்கு வந்து, அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, தாம் பிரதமர் என்பதையே மறந்து, அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்துவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. தமிழ்நாட்டுக்கு இந்தப் பத்தாண்டு காலத்தில் அவர் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டிருந்தால் அவரைப் பாராட்டலாம். பத்தாண்டு காலத்தில் இந்திய நாட்டுக்குச் செய்து காட்டிய வளர்ச்சியைச் சொல்லி இருந்தால் வரவேற்கலாம். அப்படி எதுவும் இல்லாததால், திருப்பூர் கூட்டத்தில் ஜெயலலிதாவை வானளாவப் புகழ்ந்தும், திருநெல்வேலி கூட்டத்தில் திமுகவைக் கடுமையாக விமர்சித்தும் பேசிவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர். அவர் பேசியிருப்பதைப் பார்த்துத் தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கிறார்கள்.

திமுக அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரதமர். திமுக மீதும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் பிரதமருக்கு இவ்வளவு கோபம் ஏன் என்பது புரிந்து கொள்ள முடியாதது அல்ல. தனக்கு எதிரியே இல்லை என்ற இறுமாப்பில் இருந்த பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் இணைத்து 'இந்தியா' கூட்டணி அமைக்க அடித்தளம் அமைத்தவர் மு.க.ஸ்டாலின் என்பதுதான் பிரதமர் மோடியின் கோபத்துக்குக் காரணம்.

‘காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யவில்லை’ எனப் பேசியிருக்கிறார் பிரதமர். தமிழ் செம்மொழி பிரகடனம், மிகப் பெரிய போக்குவரத்து மேம்பாலங்கள், சேலத்தில் புதிய இரயில்வே கோட்டம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்லூரியாக மேம்பாடு, திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம், சென்னையில் கடல்சார் தேசிய பல்கலைக்கழகம், இந்தியாவிலேயே முதல் முறையாக வளர்ந்த நாடுகளுக்கு இணையான 3ஜி தகவல் தொழில்நுட்பத் திட்டம், 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி என ஒன்பதாண்டு காலத்தில் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பல திட்டங்களைத் திமுக கொண்டு வந்தது.

இத்தகைய சிறப்புத் திட்டம் ஏதாவது தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு கொண்டு வந்ததாகப் பட்டியல் போட முடியுமா? ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு பிரதமர் மோடியால் ஒரு செங்கல் வைக்கப்பட்டது. மறு செங்கல் இதுவரை வைக்கப்படவில்லை. 2024 மே மாதத்துக்குப் பிறகு பதவியேற்கும் புதிய பிரதமர்தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டப்போகிறார். வீட்டில் இருந்தபடி மோடி அதனைப் பார்க்கப்போகிறார்.

இந்தியாவின் முன்னேற்றத்தைப் பேசுவதைவிட்டு, 'இந்தியா' கூட்டணியின் முன்னேற்றத்தைக் கண்டு தாங்க முடியாமல் மணிக்கொரு முறை இந்தியா கூட்டணிக் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார். மாநிலங்களை ஒடுக்குவதில் ஹிட்லராகவும், பொய்களைப் புனைவதில் கோயபல்ஸாகவும் என இரண்டுமாகவே ஆகிவிட்டார் அவர்.

’தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகனை ஒன்றிய அமைச்சராக்கி உள்ளோம்’ எனப் பெருமைப்பட்டிருக்கிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒன்றியத்தில் இருந்தபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த நான், தயாநிதி மாறன், ஆ.இராசா, மு.க.அழகிரி, ப.சிதம்பரம், அன்புமணி, பழனிமாணிக்கம், ஜி.கே.வாசன், நெப்போலியன், மணிசங்கர் அய்யர், அர.வேலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், வேங்கடபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ரகுபதி என எவ்வளவு பேர் அமைச்சர்களாக இருந்தார்கள் என எண்ணிப் பாருங்கள். இணை அமைச்சர் பொறுப்பில் முருகனை நியமித்துவிட்டு, பெருமை அடிக்காதீர்கள்.

’மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது’ என்கிற பொய்யைச் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி. ஜிஎஸ்டி நிதி முதல் பேரிடர் நிதி வரை தராத ஒன்றிய அரசின் ஏமாற்று வேலையைத் திமுக தோலுரிப்பதால், ’ஒன்றிய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது’ எனப் பொய்யைச் சொல்லியிருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் கொடுத்தது தமிழ்நாடு அரசுதான். அமைக்காமல் ஏமாற்றியது யார்? மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அனுமதி கொடுக்காமலும், நிதி கொடுக்காமலும் ஏமாற்றுவது யார்?

இதையும் படியுங்கள்:
58 வயதில் IVF முறையில் கருதரித்த பஞ்சாப் பாடகர் சித்துவின் தாய்!
'Prime Minister Modi will soon join the ranks of the missing' T.R. Balu raves

’திமுகவை இனி பார்க்க முடியாது. இனி திமுக எங்கு தேடினாலும் கிடைக்காது’ எனச் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி. ’திமுக அழிந்துபோகும். தலைதூக்காது’ என திமுக உருவான காலத்தில் இருந்து இன்று வரை பலர் பேசிக் கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், திமுக என்ற இமயமலை இன்றும் வரலாற்றில் நிமிர்ந்து நின்று கொண்டுதான் இருக்கிறது.

திமுகவையே இல்லாமல் ஆக்கிவிடுவாராம் மோடி. இப்படிச் சொன்னவர்கள் எல்லாம் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள். அந்த வரிசையில் அவரும் விரைவில் இணைந்துவிடத்தான் போகிறார் என்று எச்சரிக்கிறேன்” என்று கூறி இருக்கிறார். டி.ஆர்.பாலு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com