ஒரே மகனை இழந்த பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் பெற்றோர்கள் அடுத்து என்ன செய்வது என்றறியாமல் பெரும் சோகத்தில் மூழ்கி இருந்தனர். இதனையடுத்து சித்துவின் பெற்றோர் இருவரும் செயற்கை முறை மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடிவெடுத்து, இப்போது அவரது தாய் கர்ப்பம் தரித்துள்ளார் என்ற விஷயத்தை சித்துவின் மாமா அறிவித்துள்ளார்.
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை நடந்ததிற்கு முன் பஞ்சாப் அரசு விஐபிகளுக்கு கொடுக்கும் பாதுகாப்பை சித்துவிற்கு கொடுத்தது. அந்தப் பாதுகாப்பை விலக்கியப் பின்னரே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சித்து மூஸ்வாலா தனது குடும்பத்திற்கு ஒரே மகன் என்பதால் இது அவரின் பெற்றோரைப் பெரிதளவில் பாதித்தது. சித்துவின் தந்தை பஞ்சாப்பில் அரசு வேலை செய்துக்கொண்டிருந்தார். சென்ற ஆண்டுதான் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
தங்களது ஒரே மகனை இழந்ததால் அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் பேரதிர்ச்சியில் இருவரும் இருந்தனர். இதனையடுத்து இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவை எடுத்தார்கள். ஆனால் அவரது தாய்க்கு 58 வயதாகிவிட்டதால் செயற்கை முறையில் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். இதனைத்தொடர்ந்து இருவரும் அதற்கான சிகிச்சையை வெகுநாட்களாக வெளியே யாருக்கும் தெரியாமல் செய்துவந்தனர்.
தற்போது சித்துவின் தாயார் சரண் கவுர் கர்ப்பமாக உள்ளார். இதனை சித்துவின் மாமா சாம்கவுர் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். சித்துவின் தந்தை இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக சரண் கவுர் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை.
அதேபோல் அடிக்கடி மருத்துவர்களிடம் சென்று சரண் கவுர் ஆலோசனைப் பெற்று வருகிறார். மூஸ்வாலா கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவராக இருக்கும் சித்துவின் தாயாரான சரண் கவுருக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிவுள்ளது. இதனையடுத்து உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் வயதானவர்களுக்குக் கருத்தரித்தல் சிகிச்சை 20 சதவீதம் மட்டுமே கைக்கொடுக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.