
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது இந்த தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாக கூறிய அவர், ஜி.எஸ்.டி அமைப்பில் பெரிய சீர்திருத்தங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். மேலும், ஜிஎஸ்டி வரி அதிரடியாக குறைக்கப்பட உள்ளதாகவும், அடுத்த தலைமுறைக்கு ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம் தேவை என்று நாட்டு மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், பிரதமர் மோடி இதுபோல் பேசியிருப்பது அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி வரும் செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்தநிலையில் ஜிஎஸ்டி வரிமுறையில் கொண்டு வரப்பட உள்ள சீர்திருத்தம் என்ன என்பது குறித்தும் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது நமது நாட்டில் ஜீரோ சதவிகித வரி, 5%, 12%, 18% மற்றும் 28% என 5 வகைகளில் வரி விகிதங்கள் அமலில் உள்ளது.
இந்நிலையில், ஜிஎஸ்டியில் 12%, 28% SLABகளை நீக்கிவிட்டு, 5%, 18% SLABகள் மட்டுமே தொடர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதாவது 12% வரி விதிக்கப்படும் பொருட்கள் 5%க்கும், 28% வரி விதிக்கப்படும் பொருட்கள் 18%க்கும் குறைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே அதிகளவு வரி விதிப்பில் உள்ள இந்த பொருட்கள் மீது தான் அதிரடி மாற்றங்கள் வரஉள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது 12% வரி விகிதத்தை முற்றிலுமாக நீக்கி விட்டு, 12% வரியில் உள்ள பொருட்களுக்கு 5% பிரிவுகளுக்கு மாற்றவும், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் வரிகளைக் குறைக்கவும் ஒன்றிய அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல தற்போது ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு 18% வரி விதிக்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரும் இவற்றிற்கான வரியை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பிய நிலையில் இன்சூரன்ஸ் மீதான வரிகளும் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
ஜி.எஸ்.டி கட்டமைப்பை எளிதாக்கவும், வரிச் சுமையைக் குறைக்கவும் தொழில் அமைப்புகள் மற்றும் மாநில அரசுகளின் தொடர்ந்து நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அவர்களின் கோரிக்கையை ஏற்றே ஒன்றிய அரசு இப்போது இதைப் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இறுதி முடிவுகள் செப்டம்பர் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்னரே தெரியவரும் என்றும், அப்படி வரி விதிப்பில் செய்யப்படும் மாற்றங்கள் தீபாவளிக்கு முன்பாக நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது..