
இந்தியாவில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பிரதமர் மோடி கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது ஜிஎஸ்டி வரிவிதிப்பில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.
அக்டோபர் 20 தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதாவது இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகளில் அதிரடியாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், அப்படி வரும் மாற்றங்கள், சாமானிய மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி மக்களுக்கு தீபாவளிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி காத்திருப்பதாக கூறியதில் இருந்து இந்திய மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
தற்போது நமது நாட்டில் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகள் கொண்ட வரிமுறையாக இருக்கிறது.
அதனை மாற்றி ஜி.எஸ்.டி.யில் 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளை மட்டுமே தொடர உள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி குறைப்பை மக்களுக்கு தீபாவளி பரிசாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடியான ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் மூலமாக, இந்தியாவில் பல்வேறு பொருட்களின் விலையும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்களின் விலை, மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) மட்டும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான கார்கள், இரு சக்கர வாகனங்களுக்கு 28% வரியும், SUV-க்களுக்கு 50% வரியும் விதிக்கப்படுகிறது. அதாவது கார்களின் என்ஜின் திறன், நீளம் ஆகியவற்றை பொறுத்து, கூடுதலாக 1 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை இழப்பீட்டு செஸ் விதிக்கப்படுவதால், கார்கள் மீதான மொத்த வரி 29 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நிர்ணயிக்கப்படுகிறது.
இவை அனைத்தையும் 18% வரிக்குள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் என்ஜின் திறன் தொடர்பான சர்ச்சைகளும் முடிவுக்கு வரும். இதன்மூலம் கார், இரு சக்கர வாகனங்களின் விலை குறைய அதிகம் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கார்கள், இரு சக்கர வாகனங்கள் மீது 28% வரியும், SUV-க்கள் மீது 50% வரியும் இருப்பதால் மத்திய அரசின் புதிய முடிவால் கார் மற்றும் பைக்குகளின் விலை கணிசமாகக் குறையும் என்றும் இதனால் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்க விரும்பும் நடுத்தர வகுப்பு மக்கள் 10 சதவீதம் வரை பணத்தை சேமிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி வாகன உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்படி நடக்கும் பட்சத்தில் வாகனங்களின் பராமரிப்பு செலவும் குறையும்.
அதேபோல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தற்போது 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில் அதுவே இனியும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே, ஏற்கனவே மத்திய அரசு அதற்கு மட்டும் ஜிஎஸ்டி வரியை குறைவாக நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டால், பெரும்பாலான புதிய கார்கள் மற்றும் பைக்குகளின் விலை குறையும் என்பதால் பணக்காரர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலை மாறி இனி நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் கார்களை வாங்க முடியும். அதுமட்டுமின்றி கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான வரி குறையும் போது மக்களும் அதிகளவில் வாங்க ஆர்வம் காட்டுவார்கள், இதனால் விற்பனையும் அதிகரித்து ஆட்டோமொபைல் சந்தையும் வளர்ச்சியடையும்.