தமிழ் மொழி உலகிற்கு கிடைத்த பரிசாகும் - மலேசியாவில் பிரதமர் மோடி புகழாரம்..!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகப் பிரதமர் மோடி அவர்கள் மலேசியா சென்றுள்ளார். மலேசியப் பிரதமரின் அழைப்பை ஏற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் மோடி மலேசியாவுக்கு இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த அக்டோபர் 26 அன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 22-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர், அக்டோபர் 22 அன்று மலேசியப் பிரதமருடன் தொலைபேசி வாயிலாகவும் உரையாடினார்.

பிரதமர் மோடியைக் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் நேரில் சென்று வரவேற்றார். அவருடன் அந்நாட்டு மனிதவளத் துறை அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் மற்றும் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் லுகானிஸ்மான் பின் அவாங் சௌனி ஆகியோர் இணைந்து பிரதமரை அன்புடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இரு பிரதமர்களும் கலந்துகொண்டனர். அங்கு அவர்களுக்குச் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், மலேசியா வாழ் இந்தியர்கள் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "தமிழ் மொழி உலகிற்குத் தாராளமாகக் கிடைத்த பரிசாகும். தமிழர்கள் தங்கள் திறமைகளால் மனிதகுலத்திற்குச் சேவை செய்துள்ளனர். இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், 9 முறை பட்ஜெட் சமர்ப்பித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பெருமையுடன் கூறுகிறேன்" என்றார்.

மேலும், அன்வர் இப்ராகிம் பிரதமர் ஆவதற்கு முன்பிருந்தே எனக்கு நெருங்கிய நண்பர் என்றும், மலேசிய மக்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார். இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் வாழும் நாடுகளில் மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மலாய் மொழிக்கும் இந்திய மொழிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. மலாயாப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கையை நிறுவியதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். நமது பாரம்பரியத்தைப் பலப்படுத்தும் வகையில் தற்போது திருவள்ளுவர் மையம் ஒன்றையும் அமைக்க உள்ளோம். உலகத்துடன் இந்தியாவை இணைப்பது தமிழ்தான்; தமிழ் இலக்கியம் முடிவில்லாதது, தமிழ் கலாச்சாரம் உலகளாவியது என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

மலேசியா-இந்தியா டிஜிட்டல் கவுன்சில், இருநாடுகளின் டிஜிட்டல் ஒத்துழைப்பிற்காகப் புதிய பாதைகளை வகுத்து வருகிறது. இந்தியாவின் யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனை முறை விரைவில் மலேசியாவில் அறிமுகமாகும். கடந்த சில ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது. பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் உட்கட்டமைப்பை இந்தியாவில் நிறுவியுள்ளோம். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளன. "இந்தியாவின் வெற்றி மலேசியாவின் வெற்றி" என்றும் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்:
உங்க அக்கவுண்ட்ல இருந்து பணம் திருடப்பட்டதா? இனி ரூ.25,000 வரை வங்கி இழப்பீடு கிடைக்கும்..!
பிரதமர் மோடி
logo
Kalki Online
kalkionline.com