

டிஜிட்டல் பணப்பரிமாற்ற மோசடிகளால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கும் வகையில், புதிய அதிரடி அறிவிப்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற நிதிக் கொள்கை குழு கூட்டத்திற்குப் பிறகு, கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 21 லட்சம் பேர் டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்பட்டு, ரூ.20,000 கோடி பணத்தை இழந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ஆர்பிஐ மூன்று புதிய வரைவுக் கொள்கைகளை அறிமுகப்படுத்துகிறது:
ரூ.25,000 இழப்பீடு: டிஜிட்டல் மோசடிகளில் சிறிய அளவில் பணத்தை இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் சார்பில் அதிகபட்சமாக ரூ.25,000 வரை இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட உள்ளது. இதற்காக 2017-ம் ஆண்டின் விதிகள் மாற்றியமைக்கப்படும்.
மூத்த குடிமக்களுக்குப் பாதுகாப்பு: முதியோர்கள் மேற்கொள்ளும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பணப்பரிமாற்றம் சற்று தாமதமாக (Delayed processing) நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மோசடிகளை முன்கூட்டியே தடுத்து பணத்தை மீட்டெடுக்க முடியும்.
கடன் வசூலில் கட்டுப்பாடு: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூன்றாம் தரப்பு நபர்கள் மூலம் கடன் வசூலிப்பதை ஒழுங்குபடுத்த புதிய விதிகள் உருவாக்கப்படும். நியாயமான முறையில் கடன் வசூலிப்பதை இது உறுதி செய்யும்.
நாட்டின் தற்போதைய பொருளாதார சூழல் குறித்து கவர்னர் பகிர்ந்த முக்கியத் தகவல்கள்:
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாகவே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு மற்றும் வாகனக் கடன் வாங்கியவர்களின் மாதாந்திர தவணைத் தொகையில் (EMI) மாற்றம் இருக்காது.
ஜிடிபி வளர்ச்சி: 2026-ம் ஆண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் 2.1 சதவீதமாகக் கட்டுக்குள் உள்ளது.
ரூபாய் மதிப்பு உயர்வு: இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இனி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டை மேம்படுத்த ‘சஹகாரி வங்கி கஷம்தா நிர்மான்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 1.4 லட்சம் வங்கி ஊழியர்களுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் வங்கி நிர்வாகம் குறித்து சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், கூட்டுறவு வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன் வரம்பை அதிகரிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.