பிரதமர்களின் கண்ணில் சிக்காத செங்கோல் - நடந்தது என்ன?

பிரதமர்களின் கண்ணில் சிக்காத செங்கோல் - நடந்தது என்ன?
Updated on

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை யார் திறந்து வைப்பது என்பதுதான் சர்ச்சையின் முதல் முக்கியமான புள்ளி. அதை சட்டென்று பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னுக்கு வந்த விஷயமென்றால் அது செங்கோல்தான். இந்தியா சுதந்திரமடைந்தபோது முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவுக்கு தரப்பட்ட பரிசுப்பொருட்களில் செங்கோலும் ஒன்று. பத்தோடு ஒன்றாக கவனிப்பாரற்று கிடந்த செங்கோல், ஒரே வாரத்தில் தேசம் முழுவதும் பேசு பொருளாகிவிட்டது.

பிரதமர் நேருவுக்கு பின்னர் 75 ஆண்டுகளாக எத்தனையோ பிரதமர்கள் வந்திருந்தாலும் யாரும் செங்கோலுக்கு முக்கியத்துவம் தரவில்லை. தென்னிந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் இருந்த சைவ ஆதீனத்திலிருந்து கொண்டு வந்த தரப்பட்ட செங்கோலுக்கு பெரிய அளவில் கவனம் கிடைக்கவில்லை என்பது உண்மைதான்.

அலகாபாத் பொருட்காட்சியகத்தில் எத்தனையோ பரிசுப் பொருட்களோடு சேர்த்து 75 ஆண்டுகளாக காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்தது. அருங்காட்சியகத்தில் இருந்த ஊழியர்கள் அதை வாக்கிங் ஸ்டிக் அல்லது கைத்தடி என்றே நினைத்து வந்திருக்கிறார்கள். இந்தியாவின் முதல் பிரதமரான நேரு பயன்படுத்திய பொருட்கள் என்று வகைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு பொருட்களில் நேருவுக்கு பரிசாக வந்த கோல்டன் வாக்கிங் ஸ்டிக் என்று லேபில் ஒட்டப்பட்டிருந்தது.

1954ல் அலகாபாத் நகரத்தில் ஆனந்த பவன் என்னும் இந்த மியூசியம் கட்டப்பட்டபோது பிரதமர் நேருவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் எஸ்.சி காலா என்பவரால் செங்கோல் இங்கே கொண்டு வரப்பட்டது. நேரு தான் பயன்படுத்திய பொருட்களை வைப்பதற்கு மியூசியம் கட்டவேண்டும் என்று நினைத்ததை காலா சாத்தியப்படுத்தினார். 1947ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1954ல் திறக்கப்பட்டிருக்கிறது.

மியூசியத்தின் இயக்குநராக இருந்த காலா, மியூசியத்தில் உள்ள பொருட்கள் பற்றிய குறிப்புகளை எழுதும்போது, பிரதமர் நேருவுக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருள் என்பதை குறிப்பிட்டுள்ள காலா, பித்தளையாள் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். யார், எங்கே கொடுத்தார்கள் என்பது பற்றிய குறிப்பு இல்லை.

செங்கோலில் எழுதப்பட்டிருந்த தமிழ் வரியை யாரும் படிக்கவுமில்லை. அதில் 1947, ஆகஸ்ட் 14 என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் யாரும் கவனிக்கவில்லை. காலா எழுதிய வைத்த குறிப்புகள் அவருக்கு பின்னால் வந்தவர்களால் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறது. 2021ல் உம்மிடி பங்காரு நகைக்கடையை சேர்ந்தவர்,

மியூசியத்தில் இயக்குநரான சுனில் குப்தாவை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு பின்னரே அரசு வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

உம்மிடி பங்காரு நகைக்கடையிலிருந்து வந்த மின்னஞ்சலை மியூசியத்தை சேர்ந்தவர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சகத்தையும், கலச்சார பண்பாட்டுத்துறையையும் தொடர்பு கொண்டார்கள். இது குறித்து அனுப்பு ஓஜா என்னும் பத்திரிக்கையாளர் 2021 மார்ச் மாதம் கட்டுரை எழுதியதும் அவரை மத்திய அரசு தொடர்பு கொண்டிருக்கிறது.

செங்கோல் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல. ராஜதண்டம், தர்மதண்டம் என்று இந்தியா முழுவதும் அறிந்து விஷயம்தான். புதிதாக ஆட்சிப்பொறுப்பை மேற்கொள்பவர்களுக்கு தரப்பட்டும் கௌரவம். காளிதாசாவின் ரகுவம்சத்தில் கூட இது பற்றிய குறிப்புகள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதே மியூசியத்தில் ரஷ்யாவில் பிரபல எழுத்தாளரும், சிந்தனையாளருமான நிக்கோலஸ் ரோரிச் சம்பந்தப்பட்ட பொருட்களும் இருப்பதாக குறிப்பிடுகிறார்கள். இந்திய இலக்கியம், தத்துவம், தொல்லியல் மீது நிக்கோலஸ் ரோரிச்க்கு ஆர்வமுண்டு. அவர் நேரடியாக சம்பந்தப்பட்ட பலபொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதில் எத்தனை அபூர்வமான பொருட்கள் இருக்கிறதோ? யாருக்குத் தெரியும்?

logo
Kalki Online
kalkionline.com