

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் நிலையில், தற்போது அரசு அறிவித்திருக்கும் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்கள் மீதான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு மக்கள் கவனத்தை கவர்ந்துள்ளது.
"கல்வி கட்டண விவரங்களை வெளிப்படையாக விளம்பரம் செய்ய வேண்டும். வரும் 5ம் தேதிக்குள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். விளம்பரப்படுத்திய அறிக்கையை வரும் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்".சிபிஎஸ்இ உட்பட அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பிறப்பித்துள்ள அதிரடியான கட்டாய உத்தரவு இது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் இதுவரை அரசு மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு மூலம் முறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதைக் கடைபிடித்தே பள்ளிகள் தங்கள் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலித்து வந்தது.
மேலும், தமிழ்நாட்டில் கட்டாய வசூல் மற்றும் தன்னிச்சையான கட்டண உயர்வைத் தடுக்கவும், கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தவும் தமிழ்நாடு பள்ளிகள் சட்டத் திருத்தம் அமலில் இருந்தாலும் அதை மீறி பல தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த அறிவிப்பு பெற்றோருக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை பள்ளிகளின் தகவல் பலகை மற்றும் பள்ளியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வகுப்பு வாரியான கட்டண விவரங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் எனவும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் வகுப்பு வாரியாக கல்விக் கட்டணம் தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும் எனவும் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய, பள்ளிகள் விளம்பர பலகையின் புகைப்படத்தை எடுத்து மாவட்டக் கல்வி அதிகாரிக்கு புகைப்பட ஆதாரமாக அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசு நிர்ணயித்த கட்டண விவரங்களை அனைவரும் எளிதாகப் பார்க்கும் வகையில் பள்ளியின் நுழைவாயில் மற்றும் தகவல் பலகையில் பெரியதாக விளம்பரம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத் தொகையை விட அதிக கட்டணம் அல்லது மறைமுக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பள்ளிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே தனியார் சுயநிதிப் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தைத் தவிர டியூஷன் போன்ற வேறு எந்த கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவுகளை பள்ளிகள் இயக்குநரகம் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இனி அதிக வசூல் வேட்டையில் இறங்கும் பள்ளிகள் குறித்து தாராளமாக கல்வித்துறையில் புகார் அளிக்கலாம். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதி.