

நமது வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கம் ஆகிவிட்டது திரைப்படங்கள். பல கோடி செலவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் சில வேளைகளில் எதிர்பார்ப்பிற்கு அதிகமான லாபத்தை தருவதும் , விதிவிலக்காக அதிக லாபம் தரும் என எதிர்பார்ப்புடன் எடுக்கப்பட்ட படங்கள் வெகு சுமாராக சென்று தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை தருவதும் திரையுலகில் சகஜமாக நடந்து வரும் ஒன்று.
இந்த நிலையை மாற்றும் விதமாக தற்போது நடிகர்களின் சம்பளத்தை லாபத்தின் அடிப்படையில் நிர்ணயிக்க வலியுறுத்தி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் (TFPC) அறிவித்த இன்று (மே-2 ) ஒருநாள் மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்தம் திரையுலகில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர்களின் சம்பளத்தை லாபத்தின் அடிப்படையில் நிர்ணயிக்க வலியுறுத்தி பொதுக்குழு கூட்டத்தில் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவின் படி தயாரிப்பாளர் சங்கம் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளதாகவும் இதற்கு பெப்சி யூனியன் ஆதரவு தெரிவித்துள்ளதால் சுமார் 40 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து எனவும் தெரிகிறது.
இதனால் சினிமாவின் முக்கிய பணிகளான போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் சுமார் 7000 தொழிலாளர்கள் பாதிப்படைய கூடும் எனவும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் (FEFSI - பெப்சி) தலைவரான ஆர்கே செல்வமணி தகவல் தெரிவித்துள்ளார்.
நஷ்டம் , லாபம் இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது சம்பளத்தை வருமான விகிதாச்சார அடிப்படையில் பெற்றுக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக நடிகர்களுக்கு முன்பணம் அதிகமாக வழங்கப்படும் நடைமுறையையும் பட வெற்றி தோல்வியுடன் சம்பளம் இணைக்கப்படாததையும் சுட்டிக்காட்டி 50% முன்பணம் பெற்று மீதியை படம் வெற்றி அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும் இதனால் தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை குறைக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் ஓடிடியில் உடனே படம் வெளியாகி வருமான பாதிப்பை தடுக்கும் வகையில் தியேட்டரில் படம் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே OTT-யில் வெளியிட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.
ஒருநாள் வேலைநிறுத்தம் என்றாலும் இதனால் சில உடனடி விளைவுகளாக அந்த நாளில் நடைபெற இருந்த படப்பிடிப்பு , டப்பிங், ப்ரொடக்ஷன் பணிகள் நிறுத்தப்படும் என்பதால் தினசரி ஊழியர்களான லைட் மேன், டெக்னீஷியன்கள், ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் போன்றோருக்கு ஒரு நாள் வருமான இழப்பு ஏற்படும். ஒரு நாள் தாமதம் காரணமாக மீண்டும் தேதிகள் மாற்ற வேண்டி வரும். மேலும் ஸ்டுடியோ மற்றும் லொகேஷன் முன்பதிவு பிரச்சினைகள் ஏற்படும்.இருப்பினும் இந்த அடையாள வேலை நிறுத்தம் அவசியம் என உறுதியுடன் உள்ளது தயாரிப்பாளர் சங்கம். ஆனால் இந்த அடையாள வேலை நிறுத்த அறிவிப்பை கண்டு நடிகர் சங்கம் அதிர்ச்சியில் உள்ளது . இதனால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே பதற்றம் நீடிக்கிறது
'திரைத்துறையின் சிக்கல்களுக்கு நடிகர்களை மட்டும் குற்றம் சாட்டுவதா? நடிகர் சங்க உறுப்பினர்கள் மட்டுமே காரணம் என சித்தரிப்பதா?நடிகர் சங்கம் மீது ஆதாரம் அற்ற குற்றம் சுமத்த காரணம் காட்டும் இது போன்ற தன்னிச்சையாக வேலை நிறுத்த அறிவிப்பு வருத்தம் தருகிறது 'என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கை வாயிலாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளனர்.
தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் தொடர் இழப்புகளைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் சங்கத்தின் எதிர்ப்புகளுக்கான பதில் மற்றும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுமா அல்லது மேலும் போராட்டம் தொடருமா என்று திரைப்பட உலகில் பலவித கருத்துக்கள் வலம் வருகின்றன. எனினும் பெரிய நட்சத்திரங்களின் சம்பள முறை மாற்றம் மற்றும் தமிழ் திரையுலகில் பல்வேறு மாற்றம் வருவதற்கான வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது.