குவியும் பாராட்டுக்கள்..! 65 வினாடி வித்தியாசத்தில் முறியடிக்கப்பட்ட உலக சாதனை..!

Sebastian Sawe
Sebastian Saweimage source:Vikatan
Updated on

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மராத்தான் தூரம் வரையறுக்கப்பட்டதில் இருந்து. சாத்தியமற்றது என்று கருதப்பட்ட இந்தச் சாதனையை, முறியடிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது உலக மாரத்தான் போட்டி வரலாற்றில் முதல் முறையாக இரண்டு மணி நேரத்திற்குள் மாரத்தான் ஓடி சாதித்துக் காட்டியுள்ளார் கென்யா வீரர்.

லண்டனில் 2026 ம் ஆண்டு ஏப்ரல் 26 ம் தேதி நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் செபஸ்டியன் சாவே (Sebastian Sawe)பந்தய தூரத்தை 1 மணி நேரம் 59 நிமிடங்களில் கடந்து புதிய உலக சாதனை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த போட்டியில் கென்யாவின் செபஸ்டியன் சாவே போட்டி தூரத்தை (42.2 கிமீ) முதலில் கடந்தார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் 1 மணி நேரம் 59 நிமிடங்கள் 30 வினாடிகள் ஆகும். இது புதிய உலக சாதனையாகும். அதாவது மாரத்தான் உலகில் 2 மணி நேரத்திற்கும் குறைவாக எந்த ஒரு வீரரும் போட்டி தூரத்தை கடந்தது இல்லை என்ற தடையை அவர் உடைத்துள்ளார்.

இதன் மூலம் 2023ல் சிகாகோவில் கென்யாவின் மறைந்த கெல்வின் கிப்டம் (Kelvin Kiptum) படைத்திருந்த 2 மணி நேரம் 35 வினாடிகள் என்ற உலக சாதனையை அவர் முறியடித்துள்ளார். அதாவது வெறும் 65 வினாடிகள் நேரம் முன்பாக போட்டி தூரத்தை கடந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.செபஸ்டியனுக்கு இணையாக ஓடி நெருக்கடி கொடுத்த உகாண்டாவின் யோமிப் கெஜலிச்சா 1 மணி நேரம் 59 நிமிடங்கள் 41 வினாடிகளில் கடந்து 2வது இடத்தை பிடித்தார். உகாண்டாவின் ஜோகப் கிப்ளிமோ 2 மணி நேரம் 28 நொடிகள் என்ற வேகத்தில் ஓடி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

புதிய உலக சாதனையை படைத்து இருக்கும் 31 வயதான செபஸ்டியன் சாவே நடப்பு மாரத்தான் சாம்பியன் ஆவார்.இவர் 1995, மார்ச் 16-ல் கென்யாவில் பிறந்தவர் .சாவே, நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் பல ஆண்டுகளாகத் தன்னை மெருகேற்றி வந்தவர். 2024 வலென்சியா மாரத்தான், 2025 லண்டன் மற்றும் பெர்லின் மாரத்தான் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர். இவர் ஊக்கமருந்து விதிகளுக்கு மிகவும் கட்டுப்பட்டு நடக்கும் தூய்மையான விளையாட்டை ஆதரிப்பவர். முந்தைய போட்டிகளின் போது சுமார் 25 முறை ஊக்கமருந்து பரிசோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டு, தனது நேர்மையை உலகிற்கு நிரூபித்தவர்

இதற்கு முன் 2019 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வியன்னாவில் நடைபெற்ற ஒரு மாரத்தான் போட்டியில் , கென்யாவின் எலியுட் கிப்சோஜ்(Eliud Kipchoge) 1:59:40-ல் ஓடினாலும், அது அதிகாரப்பூர்வ உலக சாதனையாக ஏற்கப்படவில்லை. 2019 ஆம் ஆண்டில் வியான்னா ஐனியோஸ் 1:59 சேலஞ்ச் போட்டியின் போது எலியுட் கிப்சோகே இந்தத் தடையை முதன்முதலில் முறியடித்தார். ஆனால், ஒரு மணி 59 நிமிடங்கள் 40 செகண்ட்களில் ஓடி சாதனை படைத்தாலும். அந்த மாரத்தான் போட்டியில் அவர் பிரத்யேகமான காலணிகளை அணிந்து ஓடியதால் அது ஒரு சாதனையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.உலக தடகள அமைப்பால் அங்கீகரிக்கப்படாத ஒரு கண்காட்சிப் பந்தயத்தின் போது அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாலும் அது ஒரு சாதனையாக கருதப்படவில்லை.

தற்போது செபஸ்டியன் சாவே படைத்துள்ள புதிய சாதனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. சாதனை குறித்து செபஸ்டியன் சாவே பேசியதாவது" பந்தய தூரத்தில் இலக்கை அடைந்த பின்னர் நேரத்தை பார்த்த பின் நான் மிகவும் உற்சாகம் அடைந்தேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத நாள்" என்று கூறினார்.

போட்டிக்கு முன்னதாக, நிருபர் ஒருவருக்கு பேட்டியளித்த செபஸ்டியன் சாவே, என்றாவது ஒருநாள் 2 மணி நேரத்திற்கு முன்னதாக போட்டியை கடக்கும் ஒரு நபராக நான் இருப்பேன் என்று கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய சாவே, “இன்று நான் படைத்திருப்பது எனக்கான சாதனை மட்டுமல்ல, லண்டனில் கூடிநின்ற அனைவருக்கும் உரியது. நான் இன்று லண்டனில் வரலாறு படைத்துள்ளேன். புதிய தலைமுறையினருக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்: சரியான தயாரிப்பும், கடின உழைப்பும், ஒழுக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். எதுவும் சாத்தியமே!” என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: VADH 2 - ஹிந்தி - க்ரைம் திரில்லர்!
Sebastian Sawe
logo
Kalki Online
kalkionline.com