

தமிழகத்தில் வீடு, மனை போன்ற சொத்துகள் பரிவர்த்தனையில் பல்வேறு மோசடிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க அரசு பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து பத்திர பதிவுத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில், மோசடிகளை தடுக்கும் வகையில், சொத்தை பதிவு செய்ய வரும் நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடைமுறை தற்போது கடுமையாக்கப்பட்டுள்ளது. ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
இதனால் போலி நபர்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல பயோமெட்ரிக் பதிவு முறையும் கொண்டு வரப்பட்டு விற்பவர், வாங்குபவர், சாட்சிகள் அனைவரின் கைரேகை, போட்டோவும் பதிவு செய்யப்படுகின்றன.
இந்த நடைமுறையின் மூலம் ஒரே நபர் போலியாக பல பதிவுகள் செய்வதை தடுக்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல், பழைய பதிவு ஆவணங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கல் செய்து, ஆன்லைனில் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இப்படி மோசடிகளை தடுக்க பல்வேறு வழிமுறைகள் கொண்டு வரப்பட்டு, சார்-பதிவாளர்கள் எவ்வளவு கவனமாக இருந்தாலும், சில நேரங்களில் உண்மையான உரிமையாளருக்குத் தெரியாமல், விற்பவர் மற்றும் வாங்குபவர் கையெழுத்துகளை மோசடி நபர்கள் போலியாக போட்டு மோசடியாக பத்திரங்கள் பதிவு செய்யும் சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்த வகை மோசடிகளை முழுமையாக தடுக்கும் வகையில் ‘டிஜிட்டல் கையெழுத்து’ முறை அவசியம் என்று பத்திரப்பதிவுத்துறை அதிரடியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எங்கிருந்தும் பத்திரப்பதிவு செய்யும் வகையில் "ஸ்டார் 3.0" என்ற புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பான பத்திரப்பதிவை உறுதி செய்ய, பொதுமக்கள் டிஜிட்டல் கையெழுத்தை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் கையெழுத்து முறை வந்தால், சொத்து உரிமையாளர்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைப்பதுடன், போலி ஆவணங்கள் மூலம் நடைபெறும் அபகரிப்புகளும் குறையும்.