"மாவட்டத் தலைநகராம் திருப்பத்தூரில் ரயில்களை நிறுத்துங்க சார்" - பொதுமக்கள் கோரிக்கை!

Stop trains in Tirupathur
Train
Published on

திருப்பத்தூர் மாவட்டமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. மாவட்டத்தின் தலைநகராக திருப்பத்தூர் உள்ளது. இங்கு உள்ள கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தொழில் நிறுவனங்களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

திருப்பத்தூருக்கு வந்து செல்லும் பொதுமக்கள் பெரும்பாலும் பஸ்களில் தான் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் திருப்பத்தூருக்கு ரயிலில் வர வேண்டும் என்றால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு தான் வந்து செல்ல வேண்டும். மேலும் திருப்பத்தூர் வழியாக தினமும் 40க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. ஆனால் இதில் 10க்கும் குறைவான ரயில்களே நின்று செல்கின்றன. இதனால் ரயில் வசதி மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக திருப்பத்தூருக்கு வரும் பொதுமக்கள் பெரும்பாலும் பஸ்களிலேயே வர வேண்டிய சூழல் உள்ளது.

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. குறிப்பாக கழிப்பறை, குடிநீர் வசதி, கேண்டின் வசதி, மழை, வெயில் காலங்களில் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்கு தேவையான நிழற்குடை வசதிகள் கிடையாது. மேலும் பயணிகள் உட்காருவதற்கு போதுமான இருக்கைகள் கிடையாது. பயணிகள் ஒரு பிளாட்பாரத்தில் இருந்து மற்றொரு பிளாட்பாரத்திற்கு செல்வதற்கு படிகளில் தான் ஏறி செல்ல வேண்டும். இதன் காரணமாக முதியவர்கள், குழந்தைகள், அதிக சுமை கொண்டு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே திருப்பத்தூர் நகரும் படிக்கட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பத்தூர் ரெயில் நிலையத்தை முன்மாதிரி ரயில் நிலையமாக மாற்றும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. இந்த பணிகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இதுகுறித்து ரயில் பயணிகள் நல சங்க உறுப்பினர்கள் கூறியதாவது: 

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜோலார்பேட்டையில் இருந்து இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும்.

திருப்பத்தூரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வேலை நிமித்தமாக கோயம்புத்தூர் செல்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை திருப்பத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
"தடுப்பணை கட்டி தாங்க" - விவசாயிகள் கோரிக்கை!
Stop trains in Tirupathur

திருப்பத்தூரில் இருந்து ஏராளமானோர் சென்னை செல்கின்றனர். பஸ்சில் செல்வதற்கு சுமார் 5 மணி நேரங்கள் ஆகின்றன. இதனால் பஸ்சில் பொதுமக்கள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றர். இவற்றினால் அவர்களுக்கு கால நேரமும், பணமும் விரயமாகிறது. எனவே திருப்பத்தூர் வழியாக சென்னை செல்லும் அனைத்து ரயிலும் திருப்பத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். 

திருப்பத்தூர் மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளதால் திருப்பத்தூர் ரயில் நிலையத்தை ஜங்சன் ரயில் நிலையமாக தரம் உயர்த்தி பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், அனைத்து ரயில்களும் திருப்பத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com