திருப்பத்தூர் அருகே வெள்ளத்தில் சேதமடைந்த தடுப்பணையால் அந்த பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே புதிதாக தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் பகுதியில் உள்ள அணையில் இருந்து மழை காலங்களில் உபரி நீர் வெளியேறி பாம்பாறில் கலந்து குரிசிலாபட்டு ஏரி, இருணாபட்டு ஏரி, காக்கணாம்பாளையம் ஏரி ராஜபாளையம் வழியாக சென்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அணையில் சேர்ந்து அங்கு இருந்து தென்பண்ணை ஆற்றில் சென்று கலக்கிறது. இந்தநிலையில் திருப்பத்தூர் அருகே காக்கனாம்பாளையம் ஊராட்சி சிங்கம்பாளையம் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 10 அடி உயரத்திற்கு தடுப்பு அணை கட்டப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பல மாதங்கள் தண்ணீர் தேங்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள நீர்மட்டம் உயர்ந்து அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாய நிலைங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை பயிரிட்டு வந்தனர்.
வெள்ளத்தில் சேதம்:
இதனால் அந்த பகுதி எப்போதும் செழுமையாக காணப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையினால் அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டு தடுப்பணையானது மிகப்பெரிய அளவில் சேதமடைந்தது. மேலும் தடுப்பணையின் ஓரத்தில் வெள்ளம் சென்று அதன் பாதையே மாறிவிட்டது. இதனால் தற்போது அந்த பகுதியில் மழை எந்த அளவு பெய்தாலும் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் அங்கு உள்ள விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
"பாம்பாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையால் இந்த பகுதியில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் இங்கு உள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை அதிக அளவு விவசாயம் செய்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணையானது சேதமடைந்தது. இதனால் இந்த பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை. இதன் காரணமாக இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயிகள் விவசாயம் செய்யும் அளவும் குறைந்து வருகிறது. முன்பு இந்த பகுதியில் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்து வந்தோம். தற்போது அதன் அளவானது குறைந்து விட்டது. எனவே சேதமடைந்து உள்ள தடுப்பணைக்கு பதிலாக புதிய தடுப்பணை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது."