

வட தமிழகத்தை நோக்கித் தீவிரமாக நகர்ந்து வந்த ‘டிட்வா’ புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகனமழை பெய்தது. இதனைக் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. தற்போது இந்தப் புயல் வடமேற்குக் கடற்கரை மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த 24 மணி நேரம் மிக முக்கியமான காலகட்டமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘டிட்வா’ புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது. பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.‘டிட்வா’ புயல் சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கே 90 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு – தென்கிழக்கே 90 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.‘டிட்வா’ புயல் சென்னை அல்லது நெல்லூர் அருகே தாழ்வு மண்டலமாகவோ தாழ்வு பகுதியாகவோ நிலை கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை விடுத்துள்ள வானிலை எச்சரிக்கையில் சென்னை நகராட்சி, மீட்புப்படை, மின்வாரியம் உள்ளிட்ட துறைகள் எல்லாம் அவசரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்றும், மழை காரணமாக பெரும்பாலும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் நசுங்காத பம்புகள், அவசர ஒளியும் தேவையான அளவு உணவு பொருட்களும் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளாதாகவும், முக்கிய சாலைகளில் மரங்கள் விழாமல் இருக்க வெட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக கடற்கரைகள் கொந்தளித்தன. சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகள் வேகமாக எழும்பி வருகிறது. கடல் சீற்றமும் சாதாரணத்தை விட அதிகமாக காணப்பட்டது.இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மெரினா கடற்கரைக்குள் செல்ல பொதுமக்களுக்கு நேற்று முதல் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டது. கடற்கரைப் பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, காவல்துறை, கடலோர பாதுகாப்புப்படை, SDRF ஆகியவை இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மெரினாகடற்கரையில் வீசும் பலத்த காற்று மற்றும் எழும் அலைகளின் உயரம் அதிகரித்து வருவதால், மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் இருக்க சிறப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் அனைத்தும் ‘சைக்கிளோன் வார்னிங்’ கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளன.
ஆபத்தை உணராமல் நேற்று முதலே கடற்கரைகளுக்குச் மக்கள் படையெடுத்தனர். புயல் காற்று எப்படி இருக்கிறது என்பதை பார்க்க சென்றனர். இவர்களை பார்த்த போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். அது போல் கடலில் இறங்கி விளையாடிய இளைஞர்கள் குறித்து மீனவர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் அங்கு வந்து அவர்களை வெளியேற்றினர்.
இந்த நிலையில், இன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை காரணமாக மெரினா கடற்கரைக்குச் செல்ல இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டது. மேலும் தடையை மீறி பொதுமக்கள் சென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.