

'குடி குடியைக் கெடுக்கும்' என்ற பழமொழி அனைவருக்கும் தெரியும். குடியை மட்டுமல்ல இனத்தையே அழித்து விடும் என்ற தகவல் தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
"1971 ஆம் ஆண்டு மதுவிலக்கு தமிழகத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது அன்று முதல் இன்று வரை இரண்டு தலைமுறைகளாக தமிழர்கள் மதுவை குடிக்கிறார்கள் .அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் ஜீனிலும் பாதிப்பு இருக்கிறது. தொடர்ந்து மூன்றாவது தலைமுறையும் மதுவை குடித்தால் குழந்தைகள் பிறக்கும்போதே மதுவுக்கு அடிமையாக வாய்ப்பு இருக்கிறது . ஆரோக்கியமாக இருந்த தமிழர்களின் டிஎன்ஏ மாற்றமடைந்து பேரிடர் உருவாகும். இன்னும் தொடர்ந்து குடித்தால் அடுத்த 30 ஆண்டுகளில் தமிழ் சமூகமே அழிந்துவிடும். மதுவை ஒழிப்பதே முழுத் தீர்வு" என அதிரடி எச்சரிக்கைக் தகவலை அறிவித்துள்ளார் பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமி.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைசாமி பேசிய போது "டாஸ்மாக் மதுக்கடைகளை தனியாரிடம் கொடுக்கும்போது, அதிக லாப நோக்கத்துடன் செயல்படுவர். அரசு நடத்தும் பார்கள் மற்றும் தனியார் பார்கள் என, எங்கு வைத்து குடித்தாலும், குடிப்பவர்களுக்கும், சமுதாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில், 1971ல் மதுவிலக்கு நீக்கப்பட்டது. அன்றிலிருந்து இரண்டு தலைமுறையினர் மது குடிக்கின்றனர். இதனால், மது குடிப்பவர்களின் குழந்தைகளின் மரபணுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது. மூன்றாவது தலைமுறையும் மதுவை தொடர்ந்து குடித்தால், அதற்குபின் பிறக்கும் குழந்தைகள் மதுவுக்கு அடிமையானவர்களாகவே பிறக்க வாய்ப்பு உள்ளது " என குறிப்பிடப்பட்டுள்ளார்.
மேலும், 55 வயதானாலும் ஆரோக்கியமாக இருந்த தமிழக மக்களின் மரபணு, தற்போது பாதிக்கப்பட்டு வருகிறது என்றும் அதன் காரணமாக தமிழகம் மிகப்பெரிய அழிவு மற்றும் மரபணு மாற்ற பேரிடரை நோக்கி செல்கிறது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
"மதுவிலக்கால் கள்ளச்சாராயம் பெருகும் என்பது ஏற்புடையதல்ல. ஏனெனில், 30 ஆண்டுகள் மதுவிலக்கு அமலில் இருந்தபோது, அவ்வாறு நடக்கவில்லை. பார்கள், மனமகிழ் மன்றங்கள் அதிகரிப்பதால், இளைஞர்களும், மாணவர்களும் இளம் வயதிலேயே மது குடிக்க பழகும் சூழல் உருவாகிறது.
கொரோனா பரவலின்போது, மதுக்கடைகள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் மூடியிருந்தன. மது குடிக்காமல் இருக்கும்போது ஏற்படும் சிறு பிரச்னைகளை, டாக்டர்களால் எளிதாக கையாள முடியும். அரசாங்கமும், காவல் துறையும் நினைத்தால் கள்ளச்சாராயத்தை முழுமையாக ஒழிக்க முடியும்.
மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு செயல்பட்டால், இதெல்லாம் பெரிய விஷயமாகவே இருக்காது. மது குடிப்பது என்பது ஆரம்பத்தில் பழக்கமாக இருந்து, நாளடைவில் அடிமையாக மாற்றி விடுகிறது. வெளிநாடுகளிலும் மதுப் பழக்கம் பிரச்னையாகத்தான் உள்ளது. எங்கு, யார் மது குடித்தாலும், அது நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் கேடு " எனவும் அரசுக்கு வேண்டுகோள் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வை தந்துள்ளார் குழந்தைசாமி.
குழந்தைசாமி, மது அருந்துவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். மது என்பது சாதாரண பழக்கம் அல்ல என்றும் அது ஒரு நோய் (Alcohol Use Disorder) ஆக மாறக்கூடிய நிலை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மது அருந்துவதால் கல்லீரல், இதயம், மூளை உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படுவதுடன், புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும் என்றும்
"பாதுகாப்பான அளவு மது" என்று எதுவும் இல்லை; மிகக் குறைந்த அளவில்கூட உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆய்வுகளை மேற்கோள் காட்டியுள்ளார்.
மது பழக்கம் தனிநபரின் உடல்நலத்தை மட்டுமல்லாமல், குடும்ப வன்முறை, சாலை விபத்துகள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் மனநலப் பிரச்சினைகள் போன்ற சமூக பாதிப்புகளையும் உருவாக்குகிறது என்றும் மது பழக்கத்திலிருந்து வெளியேற விரும்புபவர்கள், மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்களின் உதவியைப் பெற வேண்டுவது அவசியம் என்றும் இது சிகிச்சையளிக்கக்கூடிய நிலை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னும் 30 ஆண்டுகள் மதுகுடித்தால் தமிழர்களின் டிஎன்ஏவே அழியும், மதுவை ஒழிப்பதே முழு தீர்வு என பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமி அதிர்ச்சியான ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் மதுவிற்பனையால் அரசுக்கு பல கோடி வருமானம் கிடைத்தாலும் இதனால் பல குடும்பங்கள் தெருக்கோடிக்கு வந்துவிடுவது மறுக்க முடியாத உண்மை. தந்தையின் குடிப்பழக்கத்தால் தவறான பாதைகளுக்கு செல்லும் குழந்தைகள் வாழ்க்கை முற்றிலும் சீரழிந்து விடுகிறது. குடியால் தாய் , தந்தை மற்றும் கணவனை இழந்து வேதனையில் வாழ்பவர்கள் தற்போது அதிகம் பெருகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மதுபானங்களுக்கு பதிலாக மாற்று வருவாய்களை தேடவும் நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போதைய அரசு 700- க்கும் மேற்பட்ட மதுபான கடைகளை மூடிவிட்டதாக கூறப்பட்டாலும் மது விற்பனை தற்போதும் ஜோராகவே நடைபெற்று வருவதாகவும் மதுவை அருந்துபவர்கள் சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
குடிமகன்களால் பலவித இன்னல்கள் ஏற்படுவதால் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே இருக்கும் கடைகளையும் குடியிருப்புகளுக்கு அருகே இருக்கும் கடைகளை அகற்ற பெண்கள் பலவகையான போராட்டங்களை அனைத்து ஊர்களிலும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் பதவியேற்றவுடன் பொதுமக்களுக்கு தடையாக இருந்த மதுக்கடைகளை அகற்றியும் நேரக் கட்டுப்பாடுகளை விதித்ததும் வரவேற்கப்பட்டாலும் முழுமையான மதுவிலக்கு மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது குழந்தைசாமி கூறியுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிப்பவர்கள் மனது வைத்தால் மட்டுமே குடியிலிருந்து மீள முடியும் என்பது மட்டுமே யதார்த்த நிஜம் என்பதால் அதற்கான தீர்வு முழுமையான மதுவிலக்கு மட்டுமே என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.