

இன்றைய உலகம் போகின்ற பாதை சிறப்பானதாக இல்லை. எதிர்காலத்தில் இப்பூமி பேச்சிலர்களால், அதாவது திருமணம் செய்து கொள்ளாதவர்களால் மட்டுமே நிறைந்திருக்கும் என்ற அதிர்ச்சித் தகவலை, ஒரு பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆய்வு முடிவுகள் மூலம் தெரியப்படுத்துகிறது.
அடுத்த ஆறு ஆண்டுகளில், இப்புவியில் சுமார் 45 விழுக்காட்டுப் பெண்கள் கல்யாணம் செய்து கொள்ளாமலே வாழ்வார்கள் என்ற வருத்தமான செய்தியை அது பதிவிட்டுள்ளது.
மார்கன் ஸ்டேன்லி (Morgan Stanley) என்ற நிறுவனத்தால் மிக விரிவாகச் செய்யப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மேற்கண்ட முடிவு தெரிய வந்துள்ளதாக லோக்மட் (Lokmat) செய்தித்தாள் தனது 01-05-2026 பதிப்பில் தெரிவித்துள்ளது.
ஆய்வின் கண்டறிதல்களாக கீழ்க்கண்டவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளது.
1. தற்காலப் பெண்கள் அதிகம் படித்தவர்களாகவும், பணியாற்றுவதற்கே முன்னுரிமை அளிப்பவர்களாகவும் உள்ளனர்.
2. பொருளாதாரத் தன்னிறைவெய்தி, நிதித் தேவைகளை அவர்களாகவே பூர்த்தி செய்து கொள்வதையும், அடுத்தவரை எதற்கும் அண்டி வாழாத நிலையையுமே அவர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
3. சுதந்திர வாழ்வை நேசிக்கும் அவர்கள், வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை அவர்களாகவே எடுப்பதையே விரும்புகிறார்கள். அவர்கள் வாழ்வை அடுத்தவர்கள் நிர்ணயிப்பதை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை.
4. திருமணம், மகப்பேறு, குடும்பப் பொறுப்புகள் ஆகிய அனைத்துமே, அவர்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்பதாகவே உணர்கிறார்கள்.
5. இதே நிலை நீடிக்குமாயின், பாரம்பரிய குடும்ப அமைப்புகளும், சமூகக் கட்டமைப்புகளும் நிலைகுலைந்து போகும்.
6. மக்கள் தொகை குறையும்; திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை கூடும்; வயதான காலத்தில் தனிமையில் உழலும் சங்கடங்கள் அதிகரிக்கும்.
7. இதில் ஒரு மனவியல் கூரும் அடக்கம். யாருமே இல்லாத போது, அதிக காலம் ஏன் வாழ வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி, வாழ வேண்டுமென்ற விருப்பமே மழுங்கிவிடும். பணம், பொருள் சேர்த்து என்ன செய்யப் போகிறோம் என்ற ஏக்கம் மனதை வாட்டும்.
8. பெண்களின் பெற்றோர் மணமகன் பார்ப்பதில் சுறுசுறுப்பு காட்டினாலும், மணம் செய்து கொள்ள வேண்டிய பெண்கள் அதில் அதிக ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள்.
9. எப்படி மாப்பிள்ளை பார்த்தாலும், ஏதாவது குறை கண்டு தட்டிக் கழிப்பதிலேயே குறியாக பெண்கள் இருப்பதால் ப்ரொபோசல்கள் தோல்வியடைகின்றன.
ஆனாலும் இதன் சீரியஸ்னசைச் சமுதாயம் இன்னமும் சரியாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. இனியும் தாமதிக்காமல் பெற்றோர்களும், மக்கள் நல ஆர்வலர்களும் களத்தில் இறங்க வேண்டிய தருணம் இது.
பெண்களுக்கு 23 வயதிலிருந்து 26க்குள்ளாகத் திருமணத்தை முடித்து விட வேண்டும். எக்காரணம் கொண்டும் கால தாமதம் செய்யக்கூடாது. இது தனிப்பட்டவர்களுக்கானதல்ல. ஒட்டு மொத்த உலகத்திற்குமானது. சமுதாய முன்னேற்றத்தையும், நிரந்தர நிம்மதியையும் உலகில் ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
நாம் அனைவருமே இது குறித்து சிந்திக்க வேண்டிய நேரமிது.
நமது எதிர்காலம் இப்பொழுது தீவிர பிரச்னையில் உள்ளது.
நமது குழந்தைகள் 20 வயதில் கல்யாணம் செய்து கொண்டால், ஒரு நூற்றாண்டில் 5 தலைமுறைகள் உருவாகும்.
அவர்கள் 25 ல் தாலிகட்டினால் அது நான்காகக் குறையும்.
அதுவே 30 ல் திருமணம் என்றால் 3 தலைமுறைதான்!
புரிகிறதா விபரீதம்?
அடுத்த நூற்றாண்டில் நமது மனித சமுதாயம் இன்றைக்கு இருப்பது போல் குதூகலமாக இருக்குமா? என்பது பெருங் கேள்வி. மில்லியன் டாலர் கொஸ்டின்!
பெண்கள், 30-35 வயது வரை கூடத் திருமணம் செய்து கொள்வதில்லை.
ஆண்களோ, 35 வயதைத் தாண்டியும் நிலையான வாழ்க்கை தேடியும் அது நழுவிப் போவதாலும் திருமணத்தைத் தள்ளிப் போடுகிறார்கள்.
“மூவெட்டில் செய்யாத திருமணம் திருமணமல்ல” என்ற பழம் பாடல், மௌனத்தில் மூலையில் அழுகிறது.
தாமதமான திருமணங்கள் தழைத்தோங்குகிறதா என்றால் அதுவும் இல்லை.
திருமணமான சில வருடங்களிலேயே டிவர்ஸ் கேட்டு நீதிமன்றப் படியேறுகிறார்கள்.
முறிந்த உறவால் உடையும் குடும்பங்கள்;
துன்பத்தில் உழலும் பெற்றோர்கள்;
திகைத்து நிற்கும் குழந்தைகள்;
தனித்து விடப்படும் வயதான தாய்-தந்தையர்.
ஒரு ஜெனரேஷனே வெறுமையில் தவிக்கும் நிலை!
ஒரு 50 தம்பதிகள் ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொண்டால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே குழந்தைகள் இருப்பர். இது தொடர்ந்தால் மூன்றாவது தலைமுறை என்ற ஒன்று இருப்பது சந்தேகமே.
உயரமான கட்டிடங்கள் மட்டுமே நகரங்களில் இருக்கும். நடமாடவும், வசிக்கவும் ஆட்களைத் தேட வேண்டிப் போகலாம். கிராமங்களில் வீடுகளையும், விவசாயத்தையும் காத்திட யாரும் இருக்க மாட்டார்கள்.
கூட்டுக் குடும்ப முறை ஏற்கெனவே தேய்ந்து விட்டது. அது மேலும் சிதிலமடையும்.
புது மருமகள் ஒரு குழந்தை போதுமென்கிறாள்.
உண்மை என்னவென்றால், இப்பொழுதெல்லாம் குழந்தைகள் மீதான அன்பாலோ, தாய்மையை அனுபவிக்க எண்ணியோ பெண்கள் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முன் வருவதில்லை. அது ஒரு கம்பல்ஷன். சமூகம் எதுவும் தன்னைப் பற்றிப் பேசி விடக் கூடாது என்ற ஆதங்கம். அதற்கெனவே ஒரு குழந்தை.
சமுதாயச் சரிவு!
நமது சமுதாயம் மெல்லச் சரிந்து (collapsing) வருவது இதனால்தான். சமுதாயத்தை ஒதுக்கி விட்டுத் தனியாக வாழவே பலரும் விரும்புகின்றனர் (Nucleus Family). எதற்கு இடையூறாகக் குழந்தைகள் என்ற எண்ணமும் மேலோங்கி வருகிறது. வேலை கிடைப்பதில் தாமதம், கல்யாணம் செய்வதில் தாமதம் என்று பலர் இன்று உலகெங்கும் திரிகிறார்கள்.
திருமணம் என்பது உலகியல் பிணைப்பு (Wordly Bond) என்று மட்டும் தவறாக எண்ணிக்கொள்ளக் கூடாது. வீடு, குடும்பம் மற்றும் சமூகத்தின் அச்சாணி அது; அன்பின் அடித்தளம் அது; நிம்மதியின் ஊற்று அது!
நமது சந்ததி தழைக்கவும், நம் பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றைச் சிறப்பாக்கவும் உள்ள சிறந்த சாதனம் அது!
அதனை மனிதரனைவரும் நன்குபுரிந்து கொள்ள வேண்டும்.
ஆண்களுக்கு 30 வயதுக்குள்ளும், பெண்களுக்கு 25 க்குள்ளும் திருமணங்கள் நடந்தேற வேண்டும்.
இல்லாவிட்டால் வரலாறு நமது சமுதாயத்தைத் தாழ்த்தி எழுதும்.
அழிந்து வரும் ஐந்து முக்கிய இரத்த உறவுகள்:
பெரியப்பா (அப்பாவின் அண்ணன்)
சித்தப்பா (அப்பாவின் தம்பி)
அத்தை (அப்பாவின் சகோதரி)
மாமா (அம்மாவின் சகோதரர்)
சித்தி (அம்மாவின் சகோதரி)
எதிர்காலத்தில் இந்த உறவுகள் முழுதுமாக அழிந்து விடக் கூடும்.
இதனைச் சிந்திக்க வேண்டும்.
நீங்களனைவரும் இது சீரியஸ் மேட்டர்தான் என்று உணர்ந்தால், உங்கள் மனைவி, மக்களுடன் இது குறித்துப் பேசுங்கள்.
உங்ளுக்குத் திருமண வயதில் குழந்தைகள் இருந்தால், ஆணென்றால் 30 வயதுக்குள்ளும், பெண்ணென்றால் 25க்குள்ளும் திருமணத்தை முடித்து விடுங்கள்.
அவர்களை இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். நீங்கள் பார்த்துக் கொள்வதாக உங்கள் செய்கைகள் மூலம் அவர்களை நம்பச் செய்யுங்கள்.
குறைந்து வருவது ஜனத் தொகை மட்டுமல்ல! நமது நாகரீகம், பண்பாடு, கூட்டுக் குடும்ப முறை, அதன் அளவற்ற மதிப்பு ஆகிய அனைத்துமே பாதிக்கப்பட்டு வருவதை உணருங்கள். அதனைத் தடுக்க உடன் நடவடிக்கையில் குதியுங்கள்!
இது காலத்தின் கட்டாயம். தக்க தருணத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை, பின்னால் வரப்போகும் பல இன்னல்களைத் தவிர்க்க உதவும்!