
புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படுத்தப்படும் சாக்ஷாம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 என்ற திட்டத்தின் கீழ் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த வகையில் அங்கன்வாடியில் காலியாக உள்ள 344 அங்கன்வாடி ஊழியர், 274 அங்கன்வாடி உதவியாளர் என மொத்தம் 618 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பெண்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கவுரவ ஊதியமாக அங்கன்வாடி ஊழியருக்கு ரூ.6 ஆயிரமும், உதவியாளருக்கு ரூ.4 ஆயிரமும் வழங்கப்படுகிறது. அங்கன்வாடியில் உள்ள பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பிப்பவர் அங்கன்வாடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் வசிப்பவராக இருக்க வேண்டும். இதற்கான குடியிருப்பு சான்றிதழையும் சமர்பிக்க வேண்டும்.
தகுதி வாய்ந்தவர்கள் ஆன்லைன் மூலம் https://wcd.puducherry.gov.in அல்லது https://www.py.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். நேரடியாக விண்ணப்பம் வாங்கப்படாது. விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. ஆர்வமுள்ள பெண்கள் நேரடியாக https://forms.gle/uu6rwytW8rpYGgkL7 என்ற கூகுள் படிவம் மூலமும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகிற 31-ந் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள் :
12-ம் வகுப்பு தேர்ச்சி,
புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மற்றும் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்ப முடியும்,
பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்
வயது ஆகஸ்ட் 31-ம் தேதியின்படி, 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தேர்வு, நேர்காணல் ஆகியவை கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர் மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அங்கன்வாடிக்கு அருகில் உள்ளவர்கள் மற்றும் 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள் :
கல்வித்தகுதி சான்றிதழ்,
வசிப்பிட சான்றிதழ்,
அடையாள அட்டை
உள்ளிட்ட சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.