
ஒருவருடைய தகுதி மற்றும் ஆற்றலை ஒரு நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லும் முதல் படிவமாக அவரது பயோடேட்டா இருக்கிறது. முதல் நேர்காணலிலேயே மனித வள அதிகாரியின் கவனத்தை ஈர்க்க, நுணுக்கமான வடிவமைப்பும், வலிமையான உள்ளடக்கமும் கொண்ட சுய விபர குறிப்புகள் அடங்கிய பயோடேட்டா வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கு மிகவும் அவசியம். அத்தகைய சிறப்பு வாய்ந்த பயோடேட்டாவில் கவனிக்க வேண்டிய ரகசியங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
வடிவமைப்பில் உள்ள நுணுக்கங்கள்: ஒருவருடைய பயோடேட்டா துல்லியமாகவும், தெளிவாகவும் ஒரு பக்கத்திற்குள் இருப்பதும் சிறந்தது. மேலும், நீளமாக இருப்பதை விட, எளிதாக படிக்கக்கூடிய வகையில் ஃபான்ட் அளவும், விதமும் இருக்க வேண்டும். ஒரே குறிப்பை பல நிறுவனங்களுக்கு அனுப்புவது நிறுவனத்திற்கு உங்கள் மீது இருக்கும் ஆர்வத்தை குறைக்கும் என்பதால் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப பயோடேட்டாவை திருத்தி அமைப்பது மிகவும் அவசியமாகும்.
மிக முக்கியமான ரகசியம்: பயோடேட்டாவில் அனுபவங்களை குறிப்பிடுவதை தவிர்த்து, அதற்கு பதிலாக கடந்த காலங்களில் பணி செய்த இடங்களில் அந்த நிறுவனத்திற்கு நீங்கள் ஏற்படுத்திய சாதகமான விளைவுகளை எண்கள் மற்றும் அளவீடுகள் மூலம் வெளிப்படுத்துவது உங்கள் மீது கூடுதல் மதிப்பை அளிக்க உதவும்.
திறமைகளின் சரியான வெளிப்பாடு: பயோடேட்டாவில் திறமைகள் பகுதியில் குழுவாக செயல்படும் திறன், சிக்கலை தீர்க்கும் ஆற்றல், தலைமைப் பண்பு மற்றும் கால மேலாண்மை போன்ற திறன்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது கூடுதல் சிறப்பாக அமையும். ஏனெனில், தாங்கள் அறிந்த மென்பொருட்கள் அல்லது மொழிகளைப் பட்டியலிடுவதை விட பழைய பணியின் அனுபவங்கள் மற்றும் திட்டங்கள் மூலம் உங்கள் திறமையை எவ்வாறு நிருபித்தீர்கள் என்பதை கதை போல சொல்வது கூடுதல் பலன்களைத் தருவதாக இருக்கும்.
நேர்காணலுக்கானத் தயார்நிலை: நேர்காணலுக்கு செல்லும் முன் நீங்கள் விண்ணப்பித்திருக்கும் நிறுவனத்தின் இலக்குகள், சமீபத்திய சாதனைகள் மற்றும் அதன் போட்டியாளர்கள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்வதோடு, நேர்காணல் செய்பவரிடம் வேலை மீது உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள் என்பதை இது உணர்த்தும். மேலும், உங்களுடைய பயோடேட்டாவில் இருக்கும் ஒவ்வொரு தகவலுக்கும் ஆழமான விளக்கத்தை அளிக்கும் வகையில் தயார் நிலையுடன் செல்ல வேண்டும். சாதாரணமாக கேள்விக்கு வாய்மொழியாக பதில் கூறுவதை விட, கடந்த கால அனுபவங்களை உதாரணமாகச் சொல்வது கூடுதல் வலிமை சேர்க்கும்.
உங்கள் மீதான நம்பிக்கையை மேம்பட சுயவிவரக் குறிப்பில் பொய்யான தகவல்கள் மற்றும் மிகைப்படுத்திய தகவல்களைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். தெளிவான, துல்லியமான பயோடேட்டா மற்றும் தன்னம்பிக்கையுடன் கூடிய நேர்காணல் அணுகுமுறை ஆகியவை முதல் வாய்ப்பிலேயே கண்டிப்பாக உங்களுக்கு வேலையைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும்.