

புதுச்சேரி உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் இன்று காலையில் வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் மண்ணடிபட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கானூர் பகுதியில் அரசுமேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. வாக்குப்பதிவு நடைபெறும்போதே , வாக்குச்சாவடிக்குள் நுழைந்து பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதம் முற்றி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி , இரு தரப்புகளுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் திருக்கானூர் வாக்குச்சாவடிக்குள் பதட்டம் நிலவியது. தகவல் அறிந்த காவல்துறை உடனடியாக திருக்கானூர் பகுதிக்கு விரைந்து, வாக்குச்சாவடி அருகில் கைக்கலப்பில் ஈடுபட்டிருந்த கூட்டத்தை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். அவர்கள் போலீசாரின் அறிவுரையை கேட்கவில்லை. மேலும் , கூட்டமும் கட்டுப்படுத்த முடியாத அளவில் கூடிக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த போலீஸ்காரர்கள் உடனடியாக தடியடி நடத்தி பிரச்சனையில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். இதனால் சிறிது நேரம் திருக்கானூர் வாக்கு சாவடியில் பரபரப்பு நிலவியது.