

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற அமைப்பின் தலைவராகத் திரைப்படக் கலைஞர் வாகை சந்திரசேகர் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவருக்கு பதிலாக தற்போது புஷ்பவனம் குப்புசாமி தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்பது தமிழர்களின் பாரம்பரியக் கலைகள், நாட்டுப்புறக் கலைவடிவங்கள் மற்றும் கலைஞர்களைப் பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவும், வளர்க்கவும் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மிக முக்கியமான கலாச்சார அமைப்பாகும்.
மத்திய சங்கீத நாடக அகாதமியின் நோக்கங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்காக 1955 ஆம் ஆண்டில் 'தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம்' தொடங்கப்பட்டது. பின்னர், 1973 ஆம் ஆண்டில் முத்தமிழைக் (இயல், இசை, நாடகம்) குறிக்கும் வகையில் இது 'தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இம்மன்றம் மூலம் கலைமாமணி விருதுகள் வழங்குதல், நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி அளித்தல் மற்றும் பாரம்பரிய கலைகளைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக பிரபல நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழகத்தின் பிரபல நாட்டுப்புறக் கலைஞர் மற்றும் இசைக் கலைஞரான புஷ்பவனம் குப்புசாமி, தனது வாழ்நாள் முழுவதும் கிராமிய இசையையும், நாட்டுப்புறக் கலைகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிக முக்கியப் பங்காற்றி வருகிறார்.
தன் மனைவி அனிதா குப்புசாமியுடன் இணைந்து, மேடை நிகழ்ச்சிகள், திரைப்படப் பாடல்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் நாட்டுப்புறக் கலைக்கு புதிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகர், திரைப்படப் பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முகங்கள் இவருக்கு உண்டு. நலிவடைந்து வந்த தமிழ் பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல்களுக்குத் தன் தனித்துவமான குரலால் மீண்டும் உயிர் கொடுத்து, அவற்றை உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் கொண்டு சேர்த்ததில் மிக முக்கியமானவர். திரையரங்குகளில் பல சூப்பர்ஹிட் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி, கிராமிய இசையை வெகுஜன மக்களிடமும் ரசிக்க வைத்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் புதிய தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம் எனும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகத் திரைப்படக் கலைஞர் வாகை சந்திரசேகர் முதன்முதலில் ஆகஸ்ட் 2021-இல் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலத்தைத் தொடர்ந்து, டிசம்பர் 2024-இல் மீண்டும் அவரே இப்பதவிக்கு மறுநியமனமும் செய்யப்பட்டார்.
எனினும், தற்போதைய புதிய அறிவிப்பின்படி (அக்டோபர் 5), அவருக்குப் பின் இந்த அமைப்பின் புதிய தலைவராகப் பிரபல நாட்டுப்புற இசைக்கலைஞர் முனைவர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டுப்புறக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்றதில் இவருடைய பங்கு என்றும் போற்றத்தக்கது. இவருடைய கலைச் சேவையைப் பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
கலை உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த அவருக்கு இந்த உயர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது, கலைக் குடும்பத்தினரையும் பொதுமக்களையும் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், அனைத்துத் தரப்பிலிருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவித்து வருகிறது.