காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அந்த கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சியாக ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கிய அந்த யாத்திரை, தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து பஞ்சாபை சென்றடைந்துள்ளது. அடுத்து உத்தரப்பிரதேசத்திற்குள் யாத்திரை நுழைய உள்ளது. 3750 கி.மீ. தொலைவு கொண்ட இந்த யாத்திரை பிப்ரவரியில் காஷ்மீரில் முடிவடைகிறது.
ராகுலின் யாத்திரைக்கு கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த யாத்திரையில் பங்கேற்குமாறு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருக்கும் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. அவர்கள் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை. எனினும் காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான முப்தி முகமது சய்யீத், ஜனநாயகத்தை நாட்டில் நிலைத்த வேண்டும் என்பதற்காக இந்த யாத்திரையில் பங்கேற்க இருப்பதாக கூறியுள்ளார்.
“ராகுலின் இந்த யாத்திரை நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். நாட்டு மக்களின் உண்மை நிலையை புரிந்து கொண்டோம். பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து வீழ்த்தும் நாள் வெகுதூரத்தில் இல்லை” என்று காங்கிரஸார் கூறிவருகின்றனர்.
“ராகுலின் யாத்திரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நாட்டில் இரண்டு மாநிலங்களில் மட்டுமே நேரடி ஆட்சி நடத்தி வரும் ஒரு கட்சியால் மத்தியில் ஆட்சியை எப்படி பிடிக்க முடியும். பலவீனமாக உள்ள கட்சியை வலுப்படுத்துவதில் அவர் முதலில் கவனம் செலுத்தட்டும். காங்கிரஸின் ஆட்சிக் கனவு கானல் நீர்தான்” என்று பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மோடியின் அரசில் மத்திய அமைச்சராக இருப்பவரும், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவருமான ராம் தாஸ் அதவாலே, “ராகுலின் நடைபயணத்தில் திரளான மக்கள் கலந்துகொள்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவை வாக்குகளாக மாறாது. காங்கிரஸ் நடத்துவது “பாரத் ஜோடோ யாத்திரை அல்ல, பாரத் தோடோ யாத்திரை” உண்மையிலேயே காங்கிரஸ் யாத்திரை நடத்துவதாக இருந்தால், அவர்களது 70 ஆண்டு கால ஆட்சியில் நடத்தியிருக்க வேண்டும். ராகுல் காந்தி தாடியை வேண்டுமானால் வளர்க்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சி வளராது. பிரதமர் மோடி நல்லாட்சி நடத்தி வருகிறார். அவரை ராகுல் போன்ற தலைவர்கள் யாரும் நெருங்க முடியாது.
பிரதமர் மோடி சர்வேதச அளவில் பிரபலமான தலைவராக உள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்கிறார்.
2019 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகள் மகா கூட்டணி அமைத்தது போல், 2024 தேர்தலிலும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்கும் என்று பலரும் பேசிவருகின்றனர். ஆனால், அதற்கு வழியில்லை. ஒவ்வொரு அரசியல்கட்சியும் தங்கள் கட்சியினரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க விரும்புகிறது. இது நடைமுறையில் சாத்தியமில்லை. அப்படியே ஒன்று சேர்ந்தாலும் மோடியை எதிர்க்கும் அளவுக்கு வலு இருக்காது.
2024 ஆண்டு மக்களவைத் தேர்தலில் 350 இடங்களுக்கு மேல் வென்று பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.