இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அண்மையில் நடந்த தாக்குதல்களால் ஏற்பட்ட துயரங்களுக்கு மத்தியில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் முழு கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்ள நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வந்துள்ளார். இந்தப் மனிதாபிமான நடவடிக்கை, நாடு முழுவதும் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் படைகள் எல்லையில் நடத்திய ஷெல் தாக்குதல்களில் ஜம்மு காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல்களினால் பெற்றோரை இழந்த பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 22 குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியானது.
இந்நிலையில், ராகுல் காந்தி பூஞ்ச் மாவட்டத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அந்த குழந்தைகளின் நிலையைக் கண்டு மனம் உருகிய அவர், அவர்களின் கல்விக்கு உதவும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்தக் குழந்தைகள் பட்டப்படிப்பு முடியும் வரை அவர்களது கல்விச் செலவு முழுவதையும் ராகுல் காந்தி ஏற்றுக்கொள்வார் என ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா தெரிவித்துள்ளார். உதவித்தொகைக்கான முதல் தவணை உடனடியாக வழங்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ராகுல் காந்தி, அங்கிருந்த குழந்தைகளுடன் உரையாடினார். "நான் உங்களைக் கண்டு மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் நண்பர்களை நீங்கள் இழந்துவிட்டீர்கள். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். கவலைப்பட வேண்டாம், எல்லாம் நார்மலாகிவிடும். மிகவும் கடினமாகப் படிப்பது, கடினமாக விளையாடுவது மற்றும் பள்ளியில் நிறைய நண்பர்களை உருவாக்குவதுதான் இதிலிருந்து வெளியே வர சிறந்த வழிகள்." என்று அவர் குழந்தைகளுக்கு ஊக்கமளித்தார்.
ராகுல் காந்தியின் இந்தச் செயல், போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளதுடன், மனிதாபிமான உதவிகள் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.