வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி, நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உட்பட 25-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று டெல்லி காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற ராகுல் காந்தி, கடந்த சில நாட்களாக வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டார். குறிப்பாக, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்றத்திலிருந்து பேரணியாகச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
காலை 11 மணியளவில், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து "வாக்குத் திருட்டைத் தடுக்க வேண்டும்" என்று முழக்கமிட்டபடி பேரணியைத் தொடங்கினர். பேரணியில் ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத், அகிலேஷ் யாதவ், சுப்ரியா சுலே, மெஹபூபா மொய்த்ரா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கிச் செல்லும் வழியில், டெல்லி காவல்துறையினர் இரும்புத் தடுப்புகளை அமைத்து பேரணியைத் தடுத்து நிறுத்தினர். காவல்துறை அதிகாரிகள், பேரணிக்கு அனுமதி இல்லை என்று கூறி கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கமிட்டபடி பேரணியாகச் செல்ல முயன்றனர். இதனையடுத்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற தலைவர்கள் காவல்துறை வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கைது சம்பவத்திற்குப் பல மாநில அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "பா.ஜ.க. தேர்தல் ஆணையத்தை ஒரு மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது" என்றும், ராகுல் காந்தியின் போராட்டத்திற்கு தி.மு.க. எப்போதும் துணை நிற்கும் என்றும் கூறியுள்ளார்.