
வார இறுதி விடுமுறை நாட்களில் ஒரு சிறிய சுற்றுலாப் பயணம், அதுவும் பொம்மை ரெயிலில் சென்று வந்தால், கூடவே கொஞ்சம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். அப்படி ஒரு புத்துணர்ச்சியைப் பெற, மராட்டிய மாநிலத்திலுள்ள மலை வாசஸ்தலமான மாத்தேரானைக்காண பொம்மை ரெயிலில் பயணம் செல்லவேண்டும்.
மும்பையிலிருந்து 90 கி.மீ. தூரத்திலும், புனேயிலிருந்து 120 கி.மீ. தூரத்திலும் உள்ள மாத்தேரானுக்கு பயணம் சென்று வர 2-3 நாட்கள் போதுமானதாகும்.
கோடைக்கால விடுமுறை நாட்களிலும், மழைக் காலத்தில், Monsoon Trip ஐ என்ஜாய் பண்ணவும், குளிர்காலத்தில் ஹனிமூனிற்காகவும், பொம்மை ரெயிலில் பயணிக்கவும், வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் மாத்தேரானிற்கு வந்த வண்ணமிருப்பார்கள்.
சுற்றுச்சூழல் உணர்வுத்திறன் கொண்ட மாத்தேரான், ஆசியாவில் ஆட்டோ மொஃபைல் இல்லாத ஒரே மலை வாசஸ்தலமாகும்.
மாத்தேரான் உருவான விபரம்:
1850 ஆம் ஆண்டு மே மாதம், ராய்காட் மாவட்டக் கலெக்டராக இருந்த " ஹக் பாயிண்ட்ஸ் மாலேட் டால்" என்பவரால் மாத்தேரான் அடையாளம் காட்டப்பட்டது. அப்போது மும்பை கவர்னராக இருந்த
"லார்ட் எல்ஃபின்ஸ்டோன் ", இதனை எதிர்கால மலை வாசஸ்தலமாக்க திட்டமிட்டு, மாத்தேரானை கோடை வாசஸ்தலமாக உருவாக்கினார். இந்தியாவின் மிகச்சிறிய மலை வாசஸ்தலங்களில் மாத்தேரானும் ஒன்று. பழைய பிரிட்டிஷ் காலனித்துவ கட்டிடங்கள் இருக்கின்றன. மாத்தேரான் சாலைகள் சிகப்பு சரளை பூமியால் ஆனவை.
பொம்மை ரெயில் (Toy Train):
பொம்மை ரெயில் பாதை, 1907 ஆம் ஆண்டு சர் ஆதம்ஜி பீர்பாய் என்பவரால் கட்டப்பட்டது. வன நிலம் வழியாக 20 கி.மீ. தூரத்தை உள்ளடக்கிய ரெயில் பாதையை, யுனெஸ்கோ அதிகாரிகளும் ஆய்வு செய்துள்ளனர் நெரல் சந்திப்பிலிருந்து காலையில் இரு பொம்மை ரெயில்கள் மேலே செல்லவும், மாலை வேளைகளில் இரண்டு பொம்மை ரெயில்கள் அமன் லாட்ஜிலிருந்து கீழிறங்கவும் இயக்கப்படுகின்றன. சாலை வழியாக காரில் செல்லலாம். ஆனால், அமன் லாட்ஜிற்கு அப்பால் குதிரைகள் மற்றும் கை ரிக்க்ஷாக்கள் மட்டுமே போக்கு வரத்து வசதிகளாகும்.
மாத்தேரானில் பார்க்க வேண்டிய இடங்கள்:
அலெக்சாண்டர் பாயிண்ட்; ராம்பாக் பாயிண்ட் ; கண்டாலா பாயிண்ட்; லார்ட்ஸ் பாயிண்ட் என பல காட்சி முனைகள் பார்க்க வேண்டியவைகளாகும். மேலும், பனோரமா பாயிண்ட் (சூரிய உதய பாயிண்ட்); முள்ளம்பன்றி பாயிண்ட்(சூரிய அஸ்தமனம்) ; எக்கோ பாயிண்ட் (எதிரொலி); சார்லோட் ஏரி ஆகியவைகளும் காண அருமையாக இருக்கும். மாத்தேரானுக்குத் தேவையான குடி நீரை சார்லோட் ஏரி வழங்குகிறது.
பிசார்நாத் மகாதேவ மந்திர்:
மிகவும் பழமையான பிசார்நாத் மகாதேவ மந்திர், சிவன் கோவிலாகும். கோவிலினுள், சுயம்புவாகத் தோன்றிய லிங்கமும், பிசார்நாத் என்கிற கிராம தேவதையும் உள்ளன. "எல் (L) " வடிவில் சிந்தூரினால், லிங்கம் மூடப்பட்டுள்ளது.
பிரபால் காட், விகாட் காட் என்ற இரு கோட்டைகள் மாத்தேரானில் உள்ளன. ஒரு மலையேற்ற இடமாக விகாட்காட் கோட்டை விளங்குகிறது.
மாத்தேரானில், அநேக வகையான குரங்குகள், குரைக்கும் மான்கள்; முங்கூஸ் போன்ற பல விலங்கினங்களைக் காணலாம்.
மாத்தேரானில் விற்பனை செய்யப்படும் சிக்கி ; வடா பாவ் ; கோகம் சர்பத் ஆகியவைகளை சுற்றுலாப் பயணிகள் விரும்பி சாப்பிடுகின்றனர். பலாப்பழம், மாம்பழம், ப்ளாக்பெரி போன்ற பழங்களும் பிரசித்தம்.
மாத்தேரான் பொம்மை ரெயிலில் பயணிக்க, IRCTC Website மூலமாக ஆன்லைனில் புக் செய்யலாம். ஆஃப் லைன் புக்கிங்கும் உள்ளது.
வனத்திற்கு நடுவே வளைந்து வளைந்து செல்லும் பொம்மை ரெயிலில் ஜாலியாக பயணித்து, மலைப்பிரதேசமான மாத்தேரானை கண்டு ரசியுங்கள்.