பிஹார் தலைநகர் பாட்னாவில் இன்று பாஜக அல்லாத எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அழைப்பின் பேரில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சி (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே முதலான பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இந்தக் கூட்டத்தில் முக்கியமாக, அடுத்த வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் பாஜகவை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவில் தற்போது நாட்டை ஒன்றுபடுத்துவதற்கான சித்தாந்தத்துக்கும், ஒற்றுமையை சீர்குலைத்து சிதைக்கும் சித்தாந்தத்துக்கும் இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களிடம் வெறுப்பையும், வன்முறையையும் பரப்பி நாட்டை பிளவுப்படுத்தும் செயலைச் செய்து கொண்டிருக்கிறது பாஜக. ஆனால், நாம் மக்களிடம் அன்பையும் ஒற்றுமையையும் பரப்புவதற்காகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். அடுத்த வருடம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிப்பதற்காக நாம் அனைவரும் இங்கு ஒன்றுகூடி இருக்கிறோம்.
இந்தக் கூட்டத்தின் வாயிலாக நான் ஒன்றை உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக தனது செல்வாக்கை இழந்து விட்டது. தற்போது அந்த மாநிலங்களில் பாஜகவை எங்கேயும் பார்க்க முடிவதில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்த நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும். மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.
ஏனென்றால், ஏழைகளின் நலனுக்காக நாம் பாடுபடுகிறோம். ஆனால், பாஜகவோ இரண்டு மூன்று தொழிலதிபர்களின் நலனுக்காகவே பாடுபடுகிறது. காங்கிரஸ் கட்சி தற்போது நாடு முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட்டதுபோல், வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும்” என்று பேசி இருக்கிறார்.