
இன்று மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக கனத்த மழை பெய்துள்ளது. சென்னையில் திருவெற்றியூர், எண்ணூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் லேசான தொடங்கிய மழை, திடீரென கனமழையாக உருவெடுத்தது. இதனால் சென்னையின் பல தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்த நிலையில், அதன்பின் வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியது. மதியதிற்கு மேல் மறுபடியும் கனமழையாக உருவெடுத்தது. இதேபோல் கரூர், தான்தோன்றி மலை, குளித்தலை, லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனால் தமிழகத்தின் பல பகுதிகள் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் வெப்பம் நிலவிவந்த வேளையில் இம்மழை வெப்பத்தை தணித்து மகிழ்ச்சியை தருகிறது .