
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம், நாளை மறுநாள் 14-ந்தேதி திரைக்கு வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நாகார்ஜூனா, அமீர்கான், உபேந்திரா, சோபின் சாஹிர், சுருதிஹாசன், சத்யராஜ் என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்திருப்பதால், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'கூலி' திரைப்படம் வெளியாக இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் உலகெங்கிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் முதல் நாளில் முதல் ஷோவில் படத்தை பார்க்க ஆவலுடன் உற்சாகமாக காத்திருக்கின்றனர். இந்த படத்தின் ‘டிக்கெட்' முன்பதிவு சமீபத்தில் தொடங்கிய நிலையில், முதல்நாள் காட்சிக்கான ‘டிக்கெட்'டுகள் அனைத்துமே கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே சொல்லலாம்.
இதற்கிடையில் சென்னையில் ‘எப்.டி.எப்.எஸ்.' எனப்படும் முதல் நாள் முதல் காட்சிக்கான ‘டிக்கெட்'டுகள் இடைத்தரகர்கள் மூலம் ரூ.2 ஆயிரத்தை விற்பனையாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி பல முன்னணி தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை ரூ.3 ஆயிரத்தை தொடப்போவதாக கூறப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதேபோல் பெங்களூருவில் உள்ள தியேட்டர்களிலும் கூலி படத்தின் டிக்கெட் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் கும்பகோணத்தில் ‘கூலி’ திரைப்பட சிறப்புக் காட்சிக்கு டிக்கெட் ரூ.400 விற்கப்பட்டதால் ரசிர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலையை குறைக்காவிட்டால், சிறப்புக் காட்சியை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ள ரஜினி ரசிகர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கும்பகோணம் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
இது குறித்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் இன்பராஜ் கூறும்போது, கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி ரசிகர்களாக இருக்கும் நாங்கள் அவரது திரைப்படம் வெளிவரும் போது, பல்வேறு நலத்திட்ட உதவிகளை எங்களது சொந்த செலவில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து வருகிறோம். இங்குள்ள பெரும்பாலான ரசிகர்கள் வசதி படைத்தவர்கள் இல்லையென்றாலும் ரஜினிக்காக மட்டும் ரசிகர்களாக உள்ளோம்.
இந்த நிலையில், கூலி திரைப்படம் வரும் 14-ம் தேதி கும்பகோணத்தில் உள்ள 3 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் சிறப்புக் காட்சிக்கு ரூ.190, ரூ.200 என நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்காமல் இரண்டு மடங்காக ரூ.400 வசூலிக்கின்றனர். இதுகுறித்து தியேட்டர் நிர்வாகத்திடம் கேட்டபோது, வினியோகஸ்தர்கள் தான் வசூலிக்க சொன்னதாக கூறுகிறார்கள்.
இதனை கண்டித்து முதல் கட்டமாக மாநகரில் போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டி உள்ளோம். இதனை அடுத்து ரஜினிகாந்த் வீட்டுக்குச் சென்று புகார் தெரிவிக்க உள்ளதாகவும், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மீது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாகவும், கட்டணத்தை குறைக்காவிட்டால் சிறப்புக் காட்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் இன்பராஜ கூறியுள்ளார்.
கூலி படத்தின் டிக்கெட் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விலையில் அதிகளவு வசூலிக்கப்பட்டு வருவது ரஜினி ரசிகர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.