

சமீப காலமாக பாஜக கூட்டணியில் திமுக இணைய உள்ளதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. விரைவில் நடைபெற உள்ள ஒரு நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலினும் , பிரதமர் நரேந்திர மோடியும் ஒன்றாக கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் பரவி தமிழக அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கி உள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. இந்த தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட , அந்தக் கட்சியின் பிரபலமான தலைவர்கள் அனைவரும் தோல்வியை தழுவினர். திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி , தவெகவிற்கு ஆதரவளித்து அமைச்சரவையிலும் இடம்பிடித்தது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகியதும் , திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் , முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் வெளியேறி தவெக அரசுக்கு ஆதரவு அளித்தன. இதனால் , தமிழக அரசியல் களத்தில் திமுக தனித்து விடப்பட்டது.
இந்த சம்பவங்களுக்கு பின்னர் திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடுமையான வார்த்தை போர் நடைபெற்றது. அதன் பின்னர் வழக்கமாக நாடாளுமன்றத்தில் காங்கிரசிற்கு ஆதரவளித்து வெளிநடப்பு செய்வதை திமுக கைவிட்டது. தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்ததால், மத்தியிலாவது அதிகாரத்தில் இருக்க வேண்டும், என்று திமுக நினைக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்க நினைத்தாலும் , அது தற்போது சாத்தியமாற்றதாகவும் பலவீனமாகவும் மாறிவிட்டது. மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக தங்களை முன்னிறுத்திக் கொண்ட மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோரின் கட்சிகள் பிளவுபட்டதால் பெரிய பின்னடைவில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள குறைந்தபட்ச அதிகாரமாக மத்திய அரசின் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று திமுக நினைக்கிறது. பாஜகவுடன் இணைவதன் மூலம் காங்கிரஸ் கட்சியை பழிதீர்க்கலாம் என்று நினைக்கிறது. சமீப காலமாக பாராளுமன்றத்தில் திமுக பாஜகவுடன் சற்று இணக்கமான போக்கையே கடைபிடித்து வருகிறது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைய தொடங்கும் போதே முதல் ஆளாக ரஜினி, ஸ்டாலினை சந்திந்து ஆறுதல் கூறினார். இது அப்போது பொதுவெளியில் பேசு பொருளானது. விஜயின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்தை முன் வைத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக கூறி 25 ஆண்டுகளாக ரசிகர்களை காக்க வைத்திருந்தார், அரசியல் தொடங்குவதாக அறிவித்து விட்டு பின்னர் பின்வாங்கினார். அதன் பின்னர் ரஜினி விஜய் ரசிகர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
தற்போது ரஜினி தன் சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் 51 ஆண்டுகளைக் கடந்து இன்னும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல், இந்தியாவின் மற்ற மொழிகளிலும் செல்வாக்கு பெற்ற நடிகராக உள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ரஜினி இருந்தாலும் அவர் சந்தித்த அரசியல் நெருக்கடிகள், ஏற்ற இறக்கங்கள், பெரிய வெற்றிகள் ஆகியவற்றையும் சேர்த்து சுவாரசியம் மிகுந்ததாக எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினியின் சுயசரிதை வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி உள்பட நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் ஸ்டாலினும் பிரதமர் மோடியும் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதால் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் நீண்ட காலமாக அதிமுக கூட்டணியில் இருந்து தங்கள் வெற்றி வாய்ப்பை இழந்ததாக பாஜக கருதுகிறது. அதனால் , தற்போது தமிழகத்தில் புதிய கூட்டணியை தேடி வருகிறது. விஜய்க்கு எதிராக பாஜக+ திமுக+ அதிமுக என்று கூட்டணி இருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தை ஆளுநராக்க பாஜக முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், அவரது சுயசரிதை நூலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட, மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொள்வார் எனக் கூறப்படுகிறது. திமுக, பாஜகவுடன் ரஜினி இணக்கமாக உள்ள நிலையில், இந்த மேடை புதிய அரசியல் கூட்டணிக்கான அச்சாரமாக அமையலாம் என விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இது போன்ற நிகழ்வுகளில் புதிய கூட்டணியை உருவாக்குவதில் சோ வல்லவராக இருந்துள்ளார். தற்போது ரஜினியும் அந்த பாணியை பின்பற்றுகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.