புறக்கணிக்கும் திமுக...கதவை திறக்கும் அதிமுக, பாஜக: செந்தில் பாலாஜியின் அடுத்த மூவ் என்ன?

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்த பின், சமீபகாலமாக கட்சித் தலைமையிடம் இருந்து செந்தில் பாலாஜி விலகியே இருப்பதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
Updated on

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியைச் சுற்றி அரசியல் ரீதியாகவும், ஆளும் தவெக தரப்பில் இருந்து வழக்குகள் தொடர்பாகவும் நெருக்கடி அதிகரித்து வருவதோடு திமுக தலைமையும் கண்டுக் கொள்ளவில்லை என்பதாலும் பாஜகவில் இணைந்துவிடலாம் என்று ஒரு முடிவுக்கு அவர் வந்துள்ளதாகவும், அதேநேரம் அவரை மீண்டும் அதிமுக பக்கம் கொண்டு வந்து, எஸ்பி வேலுமணிக்கு செக் வைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழக அரசியல் களத்தில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான செந்தில் பாலாஜி, தன் அரசியல் பயணத்தை 1990களில் மதிமுகவில் தொடங்கி, அதிமுக வழியாக முன்னேறி, தற்போது திமுகவின் முக்கிய அமைச்சராகப் பணிபுரிந்து வருகிறார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

இதற்கிடையே நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்த பின், சமீபகாலமாக கட்சித் தலைமையிடம் இருந்து செந்தில் பாலாஜி விலகியே இருப்பதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி, 'டாஸ்மாக்' மதுபான கொள்முதல் முறைகேடு, தவெக ஆட்சியை கவிழ்க்க குதிரைபேரம், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என செந்தில் பாலாஜிக்கு எதிராக அடுத்தடுத்து பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.

ஆனாலும் செந்தில் பாலாஜி நீதிமன்றம் மூலமாக முன் ஜாமின் பெற்று விசாரணைக்கு சென்று வருகிறார். செந்தில் பாலாஜி மீது பிடி இறுகி இருப்பதால், சட்டசபையிலும் கூட அமைதியாகவே இருக்கிறார்.

இந்நிலையில், திமுக தலைமைக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையே விரிசல் விழுந்திருப்பதாக கூறப்படுகிறது. திமுக வரலாற்றில் எந்த ஒரு சீனியர் நிர்வாகிக்கும் எதிராகவும் இவ்வளவு வழக்குகள் இல்லை. அதனால் தான் திமுக ஆட்சியில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை தனது அமைச்சரவையில் தொடர வைத்ததுடன், கட்சிக்குள் யாருக்குமே இல்லாத அதீத முக்கியத்துவமும் அளித்தார் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின்.

கரூர் சம்பவத்தில் செந்தில் பாலாஜியை மையமாக வைத்து தான் தவெக தனது தேர்தல் பிரசாரத்தையே வடிவமைத்தது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தபோது, செந்தில் பாலாஜி மீதான விவகாரங்கள் தலைமைக்கு தெரிந்தன. செந்தில் பாலாஜியால், கட்சியிலும் ஆட்சியிலும் ஏற்பட்ட பாதிப்புகளை, திமுக தற்போதும் சந்தித்து வருவதாக சீனியர்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின்
எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின்

மேலும், செந்தில்பாலாஜியை திமுகவில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என பனையூர் தரப்பில் இருந்து திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

இதற்கிடையே, அடுத்தடுத்து அணிவகுக்கும் வழக்குகள் செந்தில் பாலாஜியின் கழுத்தை நெரிக்கத் தொடங்கிய நிலையில், கடைசியாக அவர் மீது பதிவான தவெக ஆட்சியைக் கவிழ்க்கக் குதிரைபேர வழக்கை திமுக கண்டுகொள்ளவில்லை.

அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்ட போது அவருக்கு ஆதரவாக ஒரு பதிவு கூட வெளியிடாத முக ஸ்டாலின் எவ வேலு வீட்டில் சோதனை நடந்த போது, விரைவாக கண்டனத்தை பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால், தன்னை பாதுகாக்க இனி திமுக உதவாது என உறுதியாக நம்பிய செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்கும் மத்திய விசாரணை அமைப்புகளில் உள்ள வழக்குகளை தீர்க்க, நேரடியாக டெல்லி தலைவர்களிடம் நெருக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு 471 நாட்கள் சிறையில் இருந்த காலகட்டத்தில், திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தால் வழக்குகளில் இருந்து விலக்கு கிடைக்கலாம் என பாஜக தரப்பில் பலமுறை பேசப்பட்டதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.

இதையும் படியுங்கள்:
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்!
செந்தில் பாலாஜி

ஆனால், அந்த வாய்ப்பை ஏற்க செந்தில்பாலாஜி அப்போது மறுத்ததாக கூறப்படுகிறது.

தற்போது திமுக தலைமையின் புறக்கணிப்பு மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் நெருக்கடி காரணமாக, அந்த வாய்ப்பை மீண்டும் பரிசீலிக்கலாமா என்ற எண்ணம் செந்தில்பாலாஜியிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து அவரது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியிடம் இருந்தும் செந்தில் பாலாஜிக்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

செந்தில் பாலாஜி மற்றும் திமுக தலைமை இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ள நிலையில், அவரை அதிமுக பக்கம் கொண்டு வந்து, எஸ்பி வேலுமணியை கழற்றிவிடலாம் என்ற திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக சொல்லப்படுகிறது. பாஜக உடனான கூட்டணியில் அதிமுக இருப்பதால், வழக்குகளும் சுமூக தீர்வை எட்டிவிடும். இதனால் செந்தில் பாலாஜியின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேச்சாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
பாஜகவிற்கு தாவ உள்ளாரா? செந்தில் பாலாஜி! கொங்கு அரசியலில் அதிர வைக்கும் திருப்பங்கள்!
செந்தில் பாலாஜி

திமுகவால் கைவிடப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அடுத்த அரசியல் நகர்வாக அதிமுக - பாஜக கூட்டணியை நோக்கி நகர்கிறாரா என்பதே தற்போது தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ள முக்கியக் கேள்வியாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com