22 கோடி செலவில் ‘ராமாயண் வாட்டிகா’ என்ற பெயரில் ஒரு புதிய பூங்கா 6 ஏக்கரில் அமைக்கப்படுகிறது.
வட இந்தியாவில் ராமர் கோவில்களை அதிகம் காணலாம். அயோத்தி ராமர் கோவிலே அதற்கு சாட்சி. இதுபோன்ற ஏராளமான கோவில்கள் உள்ளன. ராமரின் தீவிர பக்தர்கள் அவ்வப்போது சில பூங்காக்களையும், சிலைகளையும் கட்டி வருகின்றனர். அதேபோல்தான் அரசும் ராம பக்தர்களின் மனதைப் பூர்த்தி செய்ய இதுபோன்ற பல ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அதேபோல்தான் தற்போது உத்தர பிரதேசத்தில், ராமர் பூங்கா அமைக்கப்படவுள்ளது இதில் 51 அடி கொண்ட ராமர் சிலையும் வடிக்கப்படவுள்ளது. இந்த சிலையை குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய 182 மீட்டர் உயர வல்லபாய் படேல் சிலையை வடித்திருந்த பத்ம ஸ்ரீராம் சுத்தார்தான் வடிவமைக்கவுள்ளார்.
ராமர் கடந்து சென்ற சித்ரகுட், கிஷ்கிந்தா, துரோணகிரி உள்ளிட்ட 6 வனப்பகுதிகளின் 60 சிற்பக் காட்சிகளும் பூங்காவில் வடிவமைக்கப்படுகின்றன.
இப்பூங்காவின் பணிகள் முடிவடையவுள்ளன. இதனைத்தொடர்ந்து மலர்க் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய மலர்க் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த ராமர் பூங்காவில் சில மாதங்களுக்கு முன்னர் ஏறக்குறைய 1,600 பூஞ்செடிகள் நடப்பட்டன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமர், சீதை, ஹனுமன் உள்ளிட்ட கடவுள்களின் வடிவங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. இதற்காக சுமார் 50,000 வகைப் பூக்கள் பயன்படுத்தப்பட்டன. சிவபெருமானை ராமர் புகழ்ந்து பாடும் வகையில் பாபா கேதார்நாத் கோயிலின் மாதிரி, மலர்களால் செய்யப்பட்டுள்ளது.
மலர்க் கண்காட்சியில் ராமாயணத்தில் ராமர் கடந்து சென்ற வனத்தில் பூத்த மலர்களும் காட்சிப்படுத்தப்பட்டன. முழு தோட்டமும் லட்சக்கணக்கான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதுபோன்ற பெரிய அளவிலான ராமர் பூங்கா இந்தியாவில் பெரிய சுற்றுலா இடமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பல மாநிலங்களில் ஆன்மீக பூங்கா, புராணக்கதைகளின் பூங்கா போன்ற எண்ணற்ற பூங்காக்கள் இருந்து வருகின்றன. இருப்பினும் பலருக்கு விருப்பமான பூங்காவாக இது இருக்கும் என்றே கூறப்படுகிறது.