நாற்பது வயதிற்கு மேல் நாய் குணம் என்பார்கள். ஏன் அப்படி நாய் குணம்? இதென்ன ஆண்களுக்கு மட்டும் தானா?
பொதுவாக ஒரு ஆண் வீட்டில் கத்தினால் நாய் மாதிரி கத்துகிறான் பார், நாற்பது வயதில் நாய் குணம் என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் என்று கூறுவார்கள். இதைக் கேட்டு கடுப்பாகி இன்னும் கத்தி சண்டை போடுவார்கள். தொட்டதெற்கெல்லாம் கோபம் வரும் சிடு சிடு வென எரிந்து விழுவார்கள். ஒன்றுமில்லாமலே சண்டை போடுவார்கள். ஏன் அப்படி? அதற்கு என்ன காரணம்?
அதாவது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி 40 வயது வரை சகிப்புத் தன்மை, தேவையான சக்தி, பொறுமை இதெல்லாம் அதிகமாக இருக்கும். நாற்பதை தாண்டும் போது பலவிதமான பிரச்சினைகளை சுமைகளை சந்திக்க நேரிடும். ஆனால் நமக்கு, அதற்கு தேவையான பொறுமையும், சக்தியும் முன்பு இருந்தது போல் இல்லாமல் குறைந்து விடும்.
ஒரு ஆண் 40ல் வரும் போது குழந்தைகள் பருவ வயதை அடைவார்கள். பெற்றோர்களும் அப்போதுதான் முதுமை நிலையை அடைவார்கள், குடும்பச் சுமை அதிகமாகி விடும். குழந்தைகளின் படிப்பிற்கு, tution Fee அது இது என்று ஏகப்பட்ட பொருளாதாரப் பிரச்சினை, இதைத் தவிர பெற்றோர்களளுக்கு வயதாகும் காரணத்தினால், மழை பெய்தால் எப்படி புற்றுக்குள் இருந்து பாம்புகள் மெதுவாக ஒன்றன் பின் ஒன்றாக தலையை நீட்டி கொண்டு வெளியேறுமோ அதைப் போல் அவர்களுக்கும் உடல் ரீதியான பிரச்சினைகள் ஒன்றன்பின் ஒன்றாக வரும்.
அதுமட்டுமா வயதான காரணத்தினால் அவர்களும் குழந்தையைப் போல் சில சமயம் நடந்து கொள்வார்கள். அவர்களையும் சமாளித்துக் கொண்டு வீட்டையும் கவனித்து கொள்ள வேண்டும். இன்னொரு பக்கம் குழந்தைகள் பருவநிலையை அடைவதால் அவர்களையும் பக்குவமாக சமாளிக்க வேண்டும். போறாகுறைக்கு ஆபீஸ் டென்ஷனும் சேர்ந்து விடும். இவை எல்லாவற்றையும் ஒன்று சேர சமாளிக்கும் சக்தி நாற்பது வயதையடையும் போது நம்மில் பலபேருக்கு இருப்பதில்லை. அப்படி இல்லாதிருக்கும் பட்சத்தில்தான் அவர்களுக்கு கோபம் அதிகமாகி சிடு சிடு வென விழுகிறார்கள். ஒரு சில பேர் கூடியவரை கோபத்தை கட்டுபடுத்தி கொண்டு எல்லோரையும் அனுசரித்து அமைதியாக வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.
இந்த கோபம், கத்தல் இதெல்லாம் வெறும் ஆண்களுக்கு மட்டும் தான் வருமா?? ஏன் பெண்களுக்கு வராதா??
நிச்சயமாக வரும். இன்னும் சொல்லபோனால் ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிகமாக வரும். ஆண்களுக்கு பொருளாதாரம், ஆபீஸ், குழந்தைகள் இது போன்ற பிரச்னைதான் வரும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்களும் வேலைக்குச் சென்றால் தான் குடும்பத்தை ஓட்ட முடியும்.
40 வயதுக்கு மேல் பெண்களுக்கு வீட்டு பிரச்னை, ஆபீஸ் பிரச்னை, வீட்டு வேலை, குழந்தைகளை கவனித்தல் இதைத் தவிர கூடுதலாக menopause problem. இந்த வயது பெண்களுக்கு menopause கட்டத்தை கடப்பது என்பது ஒரு பெரிய போராட்டம். கூடவே வேறு பிரச்சினைகளும் வரும்போது பெண்களுக்கும் கோபம், irritation எல்லாம் வரும்.
ஆகவே நாற்பது வயதை அடையும் போது கணவன் மனைவி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து அனுசரித்து வாழ்ந்தால் பிரச்னைகளை சமாளிப்பது சுலபம். ஒரு நாள் மனைவி டிபன் செய்ய முடியவில்லை என்றால், கணவன் பொறுமையாக அதற்கென்ன இப்ப, நான் வெளியிலிருந்து வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டால் சுமூகமாகி விடும். ஏன், உன்னால இது கூட முடியாதா... அது இது என்று கூறும் போதுதான். பிரச்சினை இரண்டு மடங்காகி விடுகிறது. அதைப் போல மனைவியும் கணவரிடம் எதையாவது வாங்கி வரச் சொல்லி அதை அவர் வாங்கிவர மறந்திருந்தால், சாந்தமாக பரவாயில்லை நாளை வாங்கிக்கலாம் என்று கூறினால் சூழ்நிலை சுமூகமாகி விடும்.
இத்தருணத்தில் குழந்தைகளிடம் போய், எங்களுக்கு 40 வயதாகி விட்டது. ஆகவே கோபம் அடிக்கடி வரும், நீங்கள் கொஞ்சம் adjust செய்து கொள்ளுங்கள் என்று கூற முடியுமா? இல்லை, பெற்றோர்களிடம்தான் இதே வார்த்தையை கூற முடியுமா?
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சூழ்நிலைகளை அனுசரித்து விட்டு கொடுத்து போக வேண்டும். நாற்பது வயதில் நாய் குணம் என்று சொல்லப்படுகின்ற ஒருவிதமான கோபமும் ஆக்ரோஷமும் கலந்த குணம் வராத படிக்கு கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், அன்புடனும் பாசத்துடனும் அமைதியான வாழ்க்கையை வாழுங்கள்!!!!