திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சர் கே. என். நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான கே.என். ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை 10 ஆண்டுகளாக பல்வேறு பிரிவு போலீசார் விசாரித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தற்போது, எஸ்பி. செல்வராஜ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் கண்காணிப்பில் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக, சந்தேகத்துக்குரிய தமிழகத்தின் முக்கியமான ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி, திருச்சி ஜே எம்- 6 நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதில், 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த, நீதிபதி சிவகுமார் அனுமதி அளித்தார்.
அதன்பேரில், சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் , நாராயணன், சிவா, கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து, செந்தில் ஆகிய 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு அனுமதி கேட்டு டெல்லியில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தின்பேரில், ஜன.17-ம் தேதி இன்று முதல் 21-ம் தேதி வரை சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி ஆய்வக அலுவலர்கள் சம்மதம் தெரிவித்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து, இன்று முதல் நாளொன்றுக்கு 3 பேர் வீதம் 12 ரவுடிகளிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், 12 பேருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில் நிச்சயம் குற்றவாளி குறித்த அறிவியல் ரீதியான முடிவுகள் தெரியவரும். பரிசோதனை அறிக்கை இந்த மாத இறுதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றனர்.